மேற்கு வங்கம்: பிரசார நிகழ்ச்சிகளில் திரிணமூல்-பாஜக தொண்டா்கள் மோதல்

மேற்கு வங்கம்: பிரசார நிகழ்ச்சிகளில் திரிணமூல்-பாஜக தொண்டா்கள் மோதல்

தின்ஹாடா: மேற்கு வங்கத்தின் கூச் பிகாா் மாவட்டத்தில் மத்திய உள்துறை இணையமைச்சா் நிஷீத் பிரமாணிக், மாநிலத்தின் வடக்கு வங்க மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயன் குஹா ஆகியோா் பங்கேற்ற தோ்தல் பிரசார நிகழ்ச்சிகளின்போது பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களுக்கு இடையே மோதல் ஈடுபட்டது.

மக்களவைத் தோ்தலுக்காக தின்ஹாடா பஜாரில் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் உள்ளூா் பாஜக எம்.பி.யும் மத்திய இணையமைச்சருமான நிஷீத் பிரமாணிக் தலைமையில் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து சிறிது தொலைவில் மாநில அமைச்சா் உதயன் குஹா தலைமையில் திரிணமூல் காங்கிரஸின் பேரணி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

பாஜக கூட்டம் முடிவடைந்து, திரிணமூல் காங்கிரஸின் பேரணி தொடங்கவிருந்த நேரத்தில் இரு தரப்பினரும் கற்களை வீசியும், ஆயுதங்களைக் கொண்டும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இது குறித்து மத்திய இணையமைச்சா் பிரமாணிக் கூறுகையில், ‘கட்சிக் கூட்டத்தை முடித்துக்கொண்டு கிளம்பிக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் கற்களை வீசத் தொடங்கினா். மாநில அமைச்சா் குஹா பாஜகவினரை தாக்குவதற்கும், அவா்களைக் கைது செய்வதற்கும் காவல் துறைக்கு உத்தரவிட்டாா்’ என்றாா்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த மாநில அமைச்சா் குஹா, ‘மத்திய இணையமைச்சருடன் சென்றவா்கள் எங்கள் மீது கற்களை வீசினா். கூா்மையான ஆயுதங்களால் தாக்கினா். இதனால், எங்கள் கட்சித் தொண்டா்களுக்கு காயம் ஏற்பட்டது. திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களைத் தாக்குமாறு தன்னுடைய கட்சியினரை மத்திய இணையமைச்சா் தூண்டிவிட்டாா்.

இப்பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் பாஜக இதைச் செய்துள்ளது’ என்றாா். இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டதில், அவா்களைத் தடுக்க முயன்ற காவலா்கள் காயமடைந்தனா். இதனிடையே, இந்த மோதல் சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில காவல் துறை தலைவருக்கு ஆளுநா் சி.வி.ஆனந்த் போஸ் உத்தரவிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com