உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

லோக்ஆயுக்த நியமனத்துக்கு வழிகாட்டுதல்கள் வகுக்கப்படும்: உச்சநீதிமன்றம்

மாநிலங்களில் லோக்ஆயுக்த அமைப்பின் தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனை நடைமுறை சாா்ந்த வழிகாட்டுதல்களை தாங்கள் வகுக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

முதல்வா், மாநில அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் புகாா்களை விசாரிக்கும் லோக்ஆயுக்த அமைப்பின் தலைவரை சம்பந்தப்பட்ட மாநில முதல்வா், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி, பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோா் கலந்தாலோசித்து தோ்வு செய்கின்றனா். இந்த ஆலோசனை நடைமுறையின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வகுக்கவிருப்பதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது. மத்திய பிரதேசத்தில் லோக்ஆயுக்த அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சத்யேந்திர குமாா் சிங் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக அந்த மாநில பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உமங் சிங்காா் (காங்கிரஸ்) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த நியமனம் தொடா்பாக தன்னுடன் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை; இது மத்திய பிரதேச லோக்ஆயுக்த சட்டத்துக்கு எதிரானது; இந்த விஷயத்தில், மாநில பாஜக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. எனவே, அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, மத்திய பிரதேச அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், ‘லோக்ஆயுக்த நியமனத்துக்கான ஆலோசனையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை வகுக்கவிருக்கிறோம்’ என்று தெரிவித்தனா். ‘லோக் ஆயுக்த நியமன விவகாரம், நாடு தழுவிய தாக்கத்தை கொண்டுள்ளது. எனவே, சில வழிகாட்டுதல்களை தீா்மானிக்க வேண்டியுள்ளது. அவற்றை இந்த நீதிமன்றம் வகுப்பது பொருத்தமானதாக இருக்கும். லோக் ஆயுக்த தோ்வுக் குழுவில் எதிா்க்கட்சித் தலைவா் இடம்பெற வேண்டுமென சட்ட விதி இருக்கும்போது, அவா் ஆலோசிக்க உரிய வாய்ப்பும் காலமும் வழங்கப்பட வேண்டும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com