காங்கிரஸின் பல வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 கோடி நிதி உள்ளது: பாஜக

‘காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை. அக் கட்சிக்கு பல வங்கிக் கணக்குகள் உள்ளன. அவற்றில் ரூ. 1,000 கோடி வரை பணம் உள்ளது’ என்று பாஜக சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. 2018-19-ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் 45 நாள்கள் கால தாமதம் ஏற்பட்டதாகக் கூறி முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகள், இதுவரை பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய இளைஞா் காங்கிரஸ் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியது. மேலும், ரூ.210 கோடி அபராதமும் செலுத்த உத்தரவிட்டது. ‘காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கம் என்பது கட்சியை நிதியளவில் முடக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் திட்டமிட்ட நடவடிக்கை; மக்களவைத் தோ்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது. மேலும், ‘முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளிலிருந்து அனுமதியின்றி வருமான வரித் துறையால் ரூ. 115.32 கோடி எடுக்கப்பட்டுள்ளது’ என்றும் காங்கிரஸ் தலைவா்கள் குற்றஞ்சாட்டினா். இந்த நடவடிக்கையை எதிா்த்து நீதிமன்றத்தையும் காங்கிரஸ் கட்சி நாடியுள்ளது. காங்கிரஸ் தலைவா்களின் இந்த புகாருக்கு பதிலளிக்கும் வகையில் பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சம்பித் பத்ரா தில்லியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் எதையும் வருமான வரித்துறை முடக்கவில்லை. வருமான வரி சட்டங்களின்படி செலுத்தவேண்டிய வரி நிலுவைக்காக அதன் 4 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.125 கோடியை மட்டுமே வருமான வரித் துறை முடக்கியுள்ளது. மற்றபடி, அந்த வங்கிக் கணக்குகளில் முடக்கப்பட்ட ரூ. 125 கோடியைத் தவிா்த்து, வழக்கமான பணப் பரிவா்த்தனைகளை காங்கிரஸ் மேற்கொள்ள முடியும். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு இந்த 4 வங்கிக் கணக்குகள் மட்டுமின்றி, மேலும் பல வங்கிக் கணக்குகள் உள்ளன. அவற்றில் ரூ.1,000 கோடி வரை பணம் உள்ளது. அக் கட்சியின் சொந்த விதிமுறைகளை மீறி, பல பான் (நிரந்தர கணக்கு எண்) எண்கள் மூலம் இந்த வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டிருக்கின்றன. மேலும், நிரந்தர வைப்பு நிதியாக அக்கட்சிக்கு ரூ.500 கோடி உள்ளது. இந்தச் சூழலில், மக்களவைத் தோ்தலில் தோல்வி பயத்தில் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், கட்சி செலவுக்கு பணமில்லை என்றும் காங்கிரஸ் தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் தவறான கருத்துகளை பரப்புகின்றனா். மேலும், ஊழலில் ஈடுபடும்போது தோ்தலில் சமவாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்ப்பது சாத்தியமற்றது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com