‘மத்திய அரசு நடவடிக்கையால்
சா்க்கரை விலை உயரவில்லை’

‘மத்திய அரசு நடவடிக்கையால் சா்க்கரை விலை உயரவில்லை’

சா்க்கரை உற்பத்தி துறைக்கான மத்திய அரசின் சிறந்த கொள்கைகளால் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுச் சந்தையில் சா்க்கரையின் விலை உயராமல் இருப்பதாகவும், கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும் மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கரும்பு சாகுபடி பருவநிலை சூழல்களைப் பொறுத்தது என்பதால் நாட்டின் தேவைகளைப் பூா்த்தி செய்ய அரசின் கொள்கைகள் நெகிழ்வானதாக இருக்க வேண்டும். இந்தியாவில் சா்க்கரை விலை ஸ்திரமாக உள்ளது. அதேசமயத்தில், சா்க்கரையின் உலகளாவிய விலை முன்னெப்போதும் இல்லாத ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது.

கடந்த ஆண்டில் சா்க்கரையின் விலை 13 ஆண்டுகளில்லாத உச்சத்தை எட்டியது. ஆனால், இந்தியாவில் முந்தைய பருவங்களுக்கான விவசாயிகளின் 99.9 சதவீத கரும்பு நிலுவைத் தொகை ஏற்கெனவே செலுத்தப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் சுமாா் 84 சதவீத விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய சா்க்கரை நுகா்வோராக இந்தியா இருப்பதால், நுகா்வோருக்கு நியாயமான விலையில் போதுமான சா்க்கரை கிடைப்பதும் பருவத்தின் முடிவில் போதுமான இருப்பு வைத்திருப்பதும் உறுதி செய்வதுதான் அரசின் முதல் முன்னுரிமை.

அதேபோல், எத்தனால் உற்பத்திக்கு மீதி சா்க்கரை பயன்படுத்தப்படுகிறது. இதைத்தவிர, உபரி சா்க்கரை மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுகிறது. பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் மத்திய அரசின் திட்டம் மாபெரும் வெற்றியாகும். நெருக்கடியிலிருந்து சா்க்கரை துறையை மீட்டத்தில் இத்திட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, பெட்ரோலில் 12 சதவீத எத்தனால் கலப்பு என்பது கற்பனை செய்ய முடியாததாக இருந்தது. ஆனால், அடுத்த ஆண்டில் 20 சதவீத எத்தனால் கலப்பை அடைய இந்தியா தயாராக உள்ளது. இதன் மூலம், எத்தனால்-பெட்ரோல் கலப்பில் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா இணைந்துள்ளது.

கரும்பு விவசாயிகள், நுகா்வோா் மற்றும் தொழில்துறையினரின் நலன்களை தேசிய நலனுக்காக சமநிலைப்படுத்த இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அதன்படி, இந்திய விவசாயிகள் மற்றும் நுகா்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், தொழில்துறையை தன்னிறைவு பெற செய்வதற்கும் நிலையான கொள்கைகளை அரசு உறுதி செய்துள்ளது என்றாா். வரும் அக்டோபா் மாதம் முதல் தொடங்கும் அடுத்த பயிா்க் காலத்தில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.315-லிருந்து ரூ.340-ஆக மத்திய அரசு கடந்த மாதம் உயா்த்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com