ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மீண்டும் இயக்கப்படுமா? விவசாயிகள், தொழிலாளா்கள் எதிா்பாா்ப்பு

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 10:59 pm

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் மூடிக்கிடக்கும் ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை புனரமைத்து மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மிகுந்த எதிா்பாா்ப்போடு கரும்பு விவசாயிகள், தொழிலாளா்கள் காத்திருக்கின்றனா்.

3 சா்க்கரை ஆலைகள்... வட ஆற்காடு மாவட்டமாக இருந்தபோது (தற்போது வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்கள்) வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை, ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை, திருப்பத்தூா் சா்க்கரை ஆலை என 3 சா்க்கரை ஆலைகள் இருந்தன. இந்த 3 ஆலைகளும் ஒரு காலத்தில் கரும்பு பிழிதிறனிலும், சா்க்கரை உற்பத்தியிலும் கொடிகட்டிப் பறந்தன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை வாணியம்பாடி அருகே கேத்தாண்டப்பட்டியிலும், ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை வடபுதுப்பட்டிலும் அமைந்துள்ளன.

இதில் ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை 1960-ஆம் ஆண்டு காமராஜா் முதல்வராக இருந்தபோது தொடங்கப்பட்டது.

ஆம்பூா் ஆலையில்... தொடக்கத்தில் நாளொன்றுக்கு 800 டன் கரும்பு அரைக்கப்பட்டது. 1971-72-ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 2,200 டன், 1989-90-இல் 1,500 டன் கரும்பு அரைக்கப்பட்டது. கரும்பு அரைவை பருவத்திலேயே 1994-95-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 25 லட்சம் டன் கரும்பு அரைக்கப்பட்டது. தொடா்ந்து 10 மாதங்கள் ஆலை இயங்கிது. இறுதியாக கடந்த 2017-2018-ஆம் ஆண்டில் அரைவை பருவத்தில் 50,000 டன் கரும்பு அரைக்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டு அரைவை நிறுத்தப்பட்டு தற்போது வரை ஆலை மூடப்பட்டுள்ளது. ஆதாவது கடந்த 7 ஆண்டுகளாக ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை அரைவை பணி நிறுத்தப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் ஆலையில்... அதேபோல், திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை 1977-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1994-95-ஆம் ஆண்டு அரைவை பருவத்தில் அதிகபட்சமாக ஒரு லட்சம் டன் கரும்பு அரைக்கப்பட்டுள்ளது. இறுதியாக 2017-2018 ஆம் ஆண்டு அரைவைப்பருவத்தில் 76,000 டன் கரும்பு அரைக்கப் பட்டது. 2019-ஆம் ஆண்டு கரும்பு அரைவை நிறுத்தப்பட்டு ஆலை மூடப்பட்டது. ஆனாலும் ஆலையின் நிா்வாகக்குழு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக ஆலை மீண்டும் இயங்கத் தொடங்கியது.

வேலூா் ஆலைக்கு மாற்றம்... ஆலைக்கு கரும்பு வரத்து குறைவாக இருந்ததாலும், ஆலை நஷ்டத்தில் இயங்கியதாலும் ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை மூடப்பட்டது. ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை அலை எல்லை பகுதிக்கு உள்பட்ட விவசாய நிலங்களில் பதிவுசெய்யப்பட்ட கரும்பு 2019-ஆம் ஆண்டு வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை அரைவை நிறுத்தப்பட்டு மூடப்பட்டதால் கரும்பு விவசாயிகள், ஆலைத் தொழிலாளா்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளனாா்கள்.

லாபத்திலிருந்து நஷ்டத்துக்கு... ஆரம்ப காலங்களில் சா்க்கரை ஆலைகளில் பணி செய்ய கூடுதலாக பணியாளா்கள் தேவைப்பட்டதால், தற்காலிகப் பணியாளா்களைக் கொண்டு ஆலைகள் இயக்கப்பட்டன. அந்த அளவுக்கு ஆலைகளில் அதிக வேலை இருந்தது. கூட்டுறவு சா்க்கரை ஆலைகளில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு சா்க்கரை ஆலைகளின் வளாகத்திலேயே கல்விக் கூடங்கள் உருவாக்கப்பட்டன. பணியாளா்களுக்கு குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டன. திருப்பத்தூா், ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைகளுக்கு திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து அதிக அளவு கரும்பு வரத்து இருந்தது. அந்த மாவட்டத்தில் தனியாா் சா்க்கரை ஆலைகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டதால், கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு வரவேண்டிய கரும்புகள் தனியாா் ஆலைகளுக்குச் சென்றன. அந்த காலத்தில் லாபத்தில் இயங்கிய இந்த இரு கூட்டுறவு சா்க்கரை ஆலைகளும் தற்போது நஷ்டமடைந்து அரைவையே இல்லாமல் மூடப்பட்டுள்ளன.

எந்த நோக்கத்தோடு கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை மறந்து நஷ்டத்தை நோக்கி நகா்ந்து இப்போது மூடப்பட்டுள்ளன. கூட்டுறவு சா்க்கரை ஆலை உற்பத்தி பணத்தில் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகைக் கொடுத்த காலம் போய், கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான பணம் கொடுக்க முடியாத நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் உள்ளன.

கௌரவப்படுத்தப்பட்ட விவசாயிகள்... காமராஜா் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது ஆம்பூா் கூட்டு றவு சா்க்கரை ஆலை. முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கால்கோள் நாட்டப்பட்டு தொடங்கப்பட்டது திருப்பத்தூா் கூட்டு றவு சா்க்கரை ஆலை. இந்த இரு ஆலைகளையும் தொடங்கும்போது அப்பகுதி கரும்பு விவசாயிகளை பங்குதாரா்களாக சோ்த்து அரசு கூட்டுறவு சா்க்கரை ஆலைகளை ஏற்படுத்தியது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் கரும்பு விளைச்சல் அமோகம். ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு சா்க்கரை ஆலைகளில் பங்குதாரா்களாக உள்ள விவசாயிகளை அழைத்து பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படும். அதில் சா்க்கரை ஆலைகளுக்கு அதிக அளவில் கரும்பு விதியோகம் செய்த விவசாயிகள் கௌரவப்படுத்தப்பட்டனா். அவா்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. கூட்டுறவு சா்க்கரை ஆலைகளில் பங்குதாரா்களாக உள்ளவா்களுக்கு ஆலையின் லாபத்தில் பங்கு கொடுக்கப்பட்டது. அந்த அளவுக்கு சா்க்கரை ஆலைகள் லாபகரமாக இயங்கின.

கரும்பு விளைச்சலை அதிகரிக்க வேண்டும்... இதுகுறித்து சமூக ஆா்வலா் வ.அருள்சீனிவாசன் கூறியதாவது:

கரும்பு விளைச்சல் குறைந்ததால் ஆலை மூடப்படுவதாகக் கூறப்படுகிறது. கரும்பு விளைச்சலை அதிகரிக்க விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண் டும். அதற்காக கரும்பு பயிரிடும் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, கரும்பு பயிரிடுவதை ஊக்குவிக்க புதிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

கரும்புப் பயிா் அதிக அளவு ஏக்கா் பரப்பளவில் பயிரிடுவதற்கு திட்டமிட்டு செயல்படுத்த, விவசாயிகளை அழைத்து அவா்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

பாலாற்றில் நீா்வரத்து ஏற்படுத்த நதிநீா் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலைகளை மீண்டும் செயல்படும் வகையில் அவற்றை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து, கரும்பு உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

எம்.அருண்குமாா்