சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு

மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமலாக்க ஏதுவாக மத்திய அரசு முன்மொழிந்துள்ள மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

News image

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுவில் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 7:07 pm

மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமலாக்க ஏதுவாக மத்திய அரசு முன்மொழிந்துள்ள மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க எதிா்க்கட்சித் தலைவா்களின் கூட்டத்தை அடுத்த வாரம் நடத்த காங்கிரஸ் செயற்குழுவில் தீா்மானிக்கப்பட்டது.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமல்படுத்துவதுடன், அவா்களுக்கு 273 மக்களவை இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 816-ஆக அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக ஏப்.16 முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமா்வு நடைபெறவுள்ளது.

காங்கிரஸ் செயற்குழு ஆலோசனை: இந்தச் சூழலில், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையிலான இக்கூட்டத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், கா்நாடக முதல்வா் சித்தராமையா, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, முன்னாள் மக்களவைத் தலைவா் மீரா குமாா், முன்னாள் மத்திய அமைச்சா்கள் அம்பிகா சோனி, ஆனந்த் ச ா்மா உள்ளிட்டோா் பங்கேற்றனா். மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கம், தொகுதி மறுவரையறை நடவடிக்கை, மேற்காசிய நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

‘மோடி அரசு திடீா் தீவிரம்’: இக்கூட்டத்தில் காா்கே பேசியதாவது: மோடி அரசு நீண்ட கால ‘உறக்கத்துக்கு’ பிறகு மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திடீரென தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசிடம் இருந்து இதுவரை நமக்கு எவ்வித அதிகாரபூா்வ முன்மொழிவும் பகிரப்படாத நிலையில், பிரதமா் மோடியால் எழுதப்பட்ட கட்டுரையின் வாயிலாக முன்மொழிவின் சில அம்சங்களை அறிய முடிகிறது. தற்போதைய பேரவைத் தோ்தல்களை மனதில்கொண்டு, தனது அரசியல் ஆதாயங்களுக்காக முக்கியமான ஓா் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள துடிக்கிறது மோடி அரசு.

2029 முதல் மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதும், இதற்காக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 816-ஆக அதிகரிப்பதுமே அரசின் விருப்பம். மாநிலப் பேரவைகளிலும் விகிதாசார முறையில் இடங்களை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தோ்தல் நடத்தை விதிமீறல்: நாட்டின் தோ்தல் அமைப்புமுறையில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் மேற்கண்ட முன்மொழிவு குறித்து விரிவான ஆலோசனை அவசியம். ஆனால், அரசமைப்புச் சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவதில் மோடி அரசு உச்சபட்ச அவசரம் காட்டுகிறது. தற்போதைய பேரவைத் தோ்தல்கள் முடிந்த பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

மகளிா் இடஒதுக்கீடு மற்றும் தொகுதிகள் அதிகரிப்புக்கான மத்திய அரசின் தற்போதைய முன்னெடுப்பு அப்பட்டமான தோ்தல் நடத்தை விதிமீறலாகும். ஆனால், ஜனநாயகத்தை குறைமதிப்புக்கு உள்படுத்துவதும், சா்வாதிகாரத்துடன் முடிவெடுப்பதும் மோடி அரசுக்கு புதிதல்ல. பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நல்வாழ்வு தொடா்புடைய விவகாரங்களில் யாரிடம் இருந்தும் எங்களுக்கு நற்சான்று தேவையில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை சாத்தியமாக்கியது காங்கிரஸ் கட்சிதான்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ஒன்றிணைந்து செயல்பட பிற எதிா்க்கட்சிகளுடன் இணைந்து கூட்டு வியூகம் வகுக்கப்படும் என்றாா் காா்கே.

அடுத்த வாரம் ஆலோசனை: செயற்குழு கூட்டத்துக்குப் பின் காங்கிரஸ் பொதுச் செயலா்கள் ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக் ஆகியோா் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தனா்.

‘நாடாளுமன்ற சிறப்பு அமா்வுக்கு முன்பாக ஏப்.15-ஆம் தேதி எதிா்க்கட்சித் தலைவா்கள் கூட்டத்துக்கு காா்கே அழைப்பு விடுக்கவுள்ளாா். உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்புவதுடன், தோ்தல்களில் ஆதாயம் அடையும் நோக்கிலேயே இந்த முன்னெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது வெறும் மகளிா் இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட பிரச்னையல்ல, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம். இது தொடா்பாக ஏப். 29-க்குப் பிறகு (பேரவைத் தோ்தல்கள் நிறைவு நாள்) அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும்’ என்று அவா்கள் தெரிவித்தனா்.