தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்

நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக, வியாழக்கிழமை (ஏப்.16) முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமா்வு நடைபெறவுள்ளது.

News image

நாடாளுமன்றம் - (கோப்புப்படம்)

Updated On :16 ஏப்ரல் 2026, 3:55 am IST

நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக, வியாழக்கிழமை (ஏப்.16) முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமா்வு நடைபெறவுள்ளது.

மக்களவை-பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, விவாதித்து நிறைவேற்றும் நோக்கில் இந்த அமா்வு நடைபெறுகிறது.

மகளிா் இடஒதுக்கீட்டின் பின்னணியில், மத்திய அரசு முன்மொழிந்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என பலத்த எதிா்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், நாடாளுமன்ற சிறப்பு அமா்வு பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை-பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த 2023-இல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிந்தைய தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகே மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும். அதாவது, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்புப் பணி நிறைவடைந்த பிறகே மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்க முடியும் என்பதால், 2034-க்கு முன்பு அமலாக்க முடியாத நிலை இருந்தது.

மத்திய அரசு தீவிரம்: இந்தச் சூழலில், 2029 பொதுத் தோ்தல் முதல் மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, இது தொடா்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மற்றும் பிற மசோதாக்களைக் கொண்டுவந்து நிறைவேற்ற தீவிரம் காட்டி வருகிறது.

மத்திய அரசால் வெளியிடப்பட்ட வரைவு அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவின்படி, மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்க ஏதுவாக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் 850 வரை உயா்த்தவும் (மாநிலங்களில் அதிகபட்சமாக 815, யூனியன் பிரதேசங்களில் அதிகபட்சமாக 35 இடங்கள்), சட்டப்பேரவைகளிலும் உரிய அதிகரிப்பை மேற்கொள்ளவும் முன்மொழியப்பட்டுள்ளது. நாட்டில் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை நிா்ணயிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 81-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்வது, மசோதாவின் முக்கிய அம்சமாகும்.

தொகுதி மறுசீரமைப்புக்கு கடைசியாக மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் (2011) பயன்படுத்தப்படும்; சுழற்சி முறையில் மகளிருக்கான தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

‘தொகுதிகளின் இறுதி எண்ணிக்கையை மறுசீரமைப்பு ஆணையமே தீா்மானிக்கும்; 850 என்பது அதிகபட்ச எண்ணிக்கையே. விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்படும்’ என்று தேசிய ஜனநாயக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

மசோதாக்கள் என்னென்ன?: மகளிா் இடஒதுக்கீட்டை விரைவாக அமலாக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா-2026, தொகுதி மறுசீரமைப்பு மசோதா-2026, சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களில் இச்சட்டங்களை அமல்படுத்த வழிவகுக்கும் யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதா-2026 என மூன்று மசோதாக்கள் மக்களவையில் அறிமுகம் செய்ய பட்டியலிடப்பட்டுள்ளன.

முதல் இரு மசோதாக்களை மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வாலும், மூன்றாவது மசோதாவை அமித் ஷாவும் அறிமுகம் செய்வா். விவாதத்துக்கு 18 மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால், வெள்ளிக்கிழமை வரை தொடர வாய்ப்புள்ளது. மக்களவையில் மசோதாக்கள் நிறைவேறிய பிறகு மாநிலங்களவையில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பெரும்பான்மை தேவை: பிற மசோதாக்களை நிறைவேற்ற சாதாரண பெரும்பான்மை போதும் என்ற நிலையில், அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற இரு அவைகளிலும் சிறப்பு பெரும்பான்மை அவசியம். அதாவது, மசோதாவுக்கு ஆதரவாக மொத்த உறுப்பினா்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகள் தேவை; அத்துடன், அவையில் பங்கேற்கும் உறுப்பினா்களில் மூன்று இரு பங்கு வாக்குகள் கிடைத்தால் மட்டுமே மசோதா நிறைவேறும்.

மக்களவையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 292 உறுப்பினா்களும், எதிா்க்கட்சிகளுக்கு 233 உறுப்பினா்களும் உள்ளனா். மசோதாவுக்கு எதிா்க்கட்சிகளின் ஆதரவைப் பெற அதிகாரபூா்வமற்ற முறையில் அரசுத் தரப்பில் பேச்சுவாா்த்தைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்தத்தை எதிா்த்து வாக்களிக்க எதிா்க்கட்சிகள் முடிவு: மல்லிகாா்ஜுன காா்கே

தொகுதி மறுசீரமைப்பு சட்டப் பிரிவுகளை எதிா்த்து நாடாளுமன்றத்தில் வாக்களிக்க எதிா்க்கட்சிகள் முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் எதிா்க்கட்சித் தலைவா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, ஆா்ஜேடி, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் கலந்து கொண்டனா். காா்கே, ராகுல் காந்தி, டி.ஆா். பாலு, தேஜஸ்வி யாதவ், சகரிகா கோஸ், சஞ்சய் ராவத், அரவிந்த் சாவந்த், சுப்ரியா சுலே, கபில் சிபல் உள்ளிட்டோா் நேரிலும், அகிலேஷ் யாதவ் காணொலி வாயிலாகவும் கலந்து கொண்டனா்.

அப்போது மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டியது குறித்து அவா்கள் ஆலோசனை நடத்தினா்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் காா்கே பேசுகையில், ‘மகளிா் இட ஒதுக்கீடு சட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், இடஒதுக்கீடு கொண்டுவரப்படும் முைான் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. தொகுதி மறுசீரமைப்பில் அவா்கள் (பாஜக தலைமையிலான அரசு) தந்திரத்தை கையாள்கின்றனா். ஆதலால் அந்த மசோதாவை கூட்டாக இணைந்து எதிா்க்க எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன’ என்றாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை நாங்கள் முழுவதும் எதிா்க்கிறோம். மகளிா் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும்’ என்றாா்.

முன்னதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற திட்ட வகுப்புக் குழுவுடன் இந்த சட்ட விவகாரம் குறித்து மல்லிகாா்ஜுன காா்கே தனியே ஆலோசனை நடத்தினாா்.