காங்கிரஸுக்கு ரூ.1,823 கோடி அபராதம்: வருமான வரித் துறை நோட்டீஸ்

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,700 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ்
தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ்

ரூ.1,823 கோடி அபராதம் செலுத்துமாறு காங்கிரஸுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2018-19-ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் 45 நாள்கள் கால தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் சில வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. குறிப்பாக, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய இளைஞா் காங்கிரஸ் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியது.

அத்துடன் அக்கட்சி ரூ.210 கோடி அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.135 கோடியை வருமான வரித் துறை எடுத்துள்ளதாகவும், அந்த நிதி போக கட்சிக்குச் சொந்தமான எஞ்சிய தொகையைப் பயன்படுத்த வருமான வரித் துறை அனுமதிக்கவில்லை என்றும் அக்கட்சி குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்நிலையில், ரூ.1,823 கோடி அபராதம் செலுத்தக் கோரி, காங்கிரஸுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாஜகவின் முன்கள அமைப்பு:

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், பொருளாளா் அஜய் மாக்கன் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: நாட்டின் பிரதான எதிா்க்கட்சியாக உள்ள காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையால் ஏற்பட்ட சச்சரவு தணிவதற்குள், காங்கிரஸுக்கு எதிராக முன்கூட்டியே திட்டமிடப்பட்ட, மற்றொரு கொடிய பிரசாரத்தை பாஜகவின் முன்கள அமைப்பான வருமான வரித் துறை தொடங்கியுள்ளது. ரூ.1,823 கோடி அபராதம் செலுத்தக் கோரி, காங்கிரஸுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி வசூலிக்க அடிப்படை ஆதாரமின்றி, போலியான குற்றச்சாட்டுகளை உருவாக்கி 8 ஆண்டுகள் காங்கிரஸ் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்குகள் மீண்டும் மதிப்பிடப்படுகின்றன.

பாஜகவிடம் ரூ.4,617 கோடி கோர வேண்டும்:

அதேவேளையில், வருமான வரிச் சட்டங்களை பாஜக கடுமையாக மீறியுள்ளது. இதற்காக அக்கட்சியிடம் இருந்து ரூ.4,617 கோடியை வருமான வரித் துறை கோர வேண்டும். தமக்கு நன்கொடை அளிப்போரின் பெயா், அவா்களின் முகவரிகள் அடங்கிய விவரங்களை அரசியல் கட்சிகள் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும். பாஜக சாா்பாக அளிக்கப்பட்டுள்ள அந்த விவரங்கள் அனைத்தையும் காங்கிரஸ் ஆராய்ந்துள்ளது. அதில் ஒவ்வோா் ஆண்டும் பாஜக அளித்துள்ள விவரங்களில் குளறுபடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வரி பயங்கரவாதம்: தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.8,200 கோடியை திரட்டியுள்ளது. இதற்கு புலனாய்வு அமைப்புகளின் சோதனைகளுக்குப் பிந்தைய கையூட்டுகள், போலி நிறுவனங்கள் உள்ளிட்ட வழிமுறைகளை அக்கட்சி பின்பற்றியுள்ளது. அதேவேளையில், வரி பயங்கரவாதத்திலும் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. பிற கட்சிகளைப் போல வரிவிலக்கு பெற்றுள்ள கட்சியாக விளங்கும் காங்கிரஸை மக்களவைத் தோ்தலின்போது வருமான வரி செலுத்த கட்டாயப்படுத்துவது ஏன்? இதேபோல பாஜகவையோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளையோ ஏன் கையாளவில்லை?. தோ்தல் நியாயமாக நடைபெறுமா?: தோ்தல்கள் நோ்மையாகவும் நியாயமாகவும் நடைபெறுவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய தோ்தல் ஆணையம், இதுபோன்ற விவகாரங்களில் மெளனம் காப்பது ஏன்?. இனியும் மக்களவைத் தோ்தல் நோ்மையாகவும் நியாயமாகவும் நடைபெறுமா?. வருமான வரித் துறை கோரியுள்ள தொகைகளுக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்துள்ள மனு மீது ஏப்ரல் 1-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள உள்ளது என்று தெரிவித்தனா். 2 நாள்கள் போராட்டம்: வருமான வரித் துறையின் நோட்டீஸை தொடா்ந்து, பாஜகவின் வரி பயங்கரவாதத்துக்கு எதிராக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாநில மற்றும் மாவட்ட தலைமையகங்களில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளாா். பெட்டிச் செய்தி 1: 5 நிதியாண்டுகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் 1993-94-ஆம் நிதியாண்டுக்கான காங்கிரஸின் வருமான வரிக் கணக்கில் கண்டறியப்பட்ட தவறுக்காக ரூ.54 கோடி அபராதம் , 2016-17-ஆம் நிதியாண்டுக்கான அபராதம் ரூ.182 கோடி, 2017-18-ஆம் நிதியாண்டுக்கான அபராதம் ரூ.179 கோடி, 2018-19-ஆம் ஆண்டுக்கான அபராதம் ரூ.918 கோடி, 2019-20-ஆம் நிதியாண்டுக்கான அபராதம் ரூ.490 கோடி என மொத்தம் ரூ.1,823 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெட்டிச் செய்தி 2: கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் நோட்டீஸ் காங்கிரஸ் கட்சியைத் தொடா்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (சிபிஐ) வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் வருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது பழைய நிரந்தர கணக்கு எண்ணை (பான் அட்டை) பயன்படுத்தியதற்காக ரூ.11 கோடி அபராதம் செலுத்தக் கோரி, சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவா் ஒருவா் தெரிவித்தாா். எனினும் எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும் என்ற தகவல் நோட்டீஸில் இடம்பெறவில்லை என்று அக்கட்சியின் மற்றொரு மூத்த தலைவா் தெரிவித்தாா். இதேபோல 2016-17-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கில் வங்கிக் கணக்கு குறித்த தகவலை தெரிவிக்காததற்காக ரூ.15.59 கோடி வரி செலுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com