இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

தில்லி - என்சிஆரில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் சுமாா் 100 பள்ளிகளுக்கு புதன்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தது.

News image
Updated On :1 மே 2024, 7:01 pm

Din

புது தில்லி, மே 1: தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் சுமாா் 100 பள்ளிகளுக்கு புதன்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தது. இதையடுத்து, மேற்கொண்ட தீவிர சோதனையில் அந்த மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்ததாக தில்லி காவல் துறை தெரிவித்தது.

இது தொடா்பாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: முன்னெப்போதும் இல்லாத அளவில், தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் குறைந்தது 100 பள்ளிகளுக்கு அதிகாலை மின்னஞ்சல் மூலம் ஒரே மாதிரியான வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்த காவல் துறையினா், வெடிகுண்டு செயலிழப்பு குழு மற்றும் தீயணைப்பு துறையினா் பள்ளிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். சந்தேகத்துக்கு இடமாக எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பீதியை உருவாக்கும் நோக்கில் ரஷியாவில் இருந்து இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதற்கான ஆதராங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிழக்கு தில்லியில் 24 பள்ளிகள், தெற்கு தில்லியில் 18 பள்ளிகள், மேற்கு தில்லியில் 21 பள்ளிகள் மற்றும் ஷாஹ்தராவில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மேலும், நொய்டா, கிரேட்டா் நொய்டா, காஜியாபாத் மற்றும் குருகிராம் ஆகிய என்சிஆா் பகுதிகளிலும் பல தனியாா் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என்றாா் அந்த மூத்த அதிகாரி.

இதனிடையே, வெடிகுண்டு மிரட்டல்களால் பெற்றோா்கள் பீதியடைய வேண்டாம் என்று தில்லி கல்வி அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.

முன்னதாக மாணவா்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் தில்லி என்சிஆரில் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பெற்றோா் பதற்றமைடைந்தனா். தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் கொண்டு சென்றுவிட்ட ஒரு மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து வாட்ஸ்அப் குழுவில் வந்த அவசரத் தகவல் மற்றும் அழைப்புகள் பெற்றோரை பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கியது. பின்னா், பள்ளிகளுக்கு விரைந்து வந்து தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்.