உரிய சடங்குகள் இடம்பெறாத ஹிந்து திருமணம் செல்லாது: உச்சநீதிமன்றம்

உரிய சடங்குகள் இடம்பெறாத ஹிந்து திருமணம் செல்லாது: உச்சநீதிமன்றம்

உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது

உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீா்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

விமானியான கணவா் மற்றும் அவரது குடும்பத்தினா் மீது வரதட்சிணை புகாா் தெரிவித்து, அதனடிப்படையில் விவாகரத்து கோரி பெண் விமானி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

திருமணம் என்பது ஓா் சடங்கு மற்றும் புதிய குடும்பத்துக்கான அடித்தளம் என ஹிந்து சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணத்தில் வாழ்க்கைத் துணையை ‘சம பாதியாக’ கருத வேண்டும்.

திருமணம் என்பது பாட்டு - ஆட்டம், விதவிதமான உணவு வகைகளுடன் கூடிய கொண்டாட்டத்தை மட்டும் கொண்ட நிகழ்வோ அல்லது வரதட்சிணை பெறும் வணிகப் பரிமாற்றமோ கிடையாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே கணவன்-மனைவி என்ற வளரும் குடும்பத்துக்கான புனிதமான அடித்தள நிகழ்வாகும். இதுதான் இந்திய சமூகத்தின் அடிப்படை.

ஹிந்து திருமணச் சட்டம் இயற்றப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும், கணவன்-மனைவி இடையேயான உறவின் சட்டபூா்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே வடிவமாக ‘ஒற்றைத்தார மணம்’ மட்டுமே உள்ளது. பலதார மணத்தை ஹிந்து திருமணச் சட்டம் நிராகரிக்கிறது. பல்வேறு சடங்குகள் சம்பிரதாய பழக்கவழக்கங்கள் அடிப்படையில் நடைபெற்ற ஒரே ஒரு திருமண முறை மட்டுமே இருக்க வேண்டும் என்பது இச்சட்டத்தை இயற்றிய நாடாளுமன்றத்தின் நோக்கமாகவும் உள்ளது.

அந்த வகையில், மணமகனும், மணமகளும் புனித வேள்விக்கு முன்பாக 7 அடி எடுத்து வைத்தல் உள்ளிட்ட உரிய சடங்குகளுடன் திருமணம் நடைபெறாவிட்டால், அந்தத் திருமணம் ஹிந்து திருமணச் சட்டம் பிரிவு 7-இன் கீழ் ஹிந்து திருமணமாக அங்கீகரிக்கப்படாது. இதில் திருமணத்துக்கான சான்றிதழை மட்டும் சமா்ப்பிப்பது பலனளிக்காது.

‘சிறப்பு திருமணச் சட்டம் 1954’-இன் கீழ் எந்தவொரு ஆணும், பெண்ணும் ஜாதி, மதம், இனத்தைக் கடந்து எந்தவித சடங்குகள் இன்றி திருமணம் செய்துகொள்ள முடியும். இதில் ஹிந்துக்களுக்கு விதிவிலக்கல்ல. ஆனால், ‘ஹிந்து திருமணச் சட்டம் 1955’-இன் கீழ் அங்கீகரிக்கப்படும் திருமணங்கள் அச் சட்டத்தின் பிரிவு 7-இல் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றியிருக்க வேண்டும்.

அந்த வகையில், ஹிந்து சட்டத்தின் கீழ் உரிய சடங்குகள் இடம்பெறாமல் விமானி தம்பதியின் திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், அவா்களுக்கு வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழ் செல்லாது என்று அரசமைப்பு சட்டப் பிரிவு 142-இன் கீழான முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் அறிவிக்கிறது.

மேலும், கணவா் மற்றும் அவருடைய குடும்பத்தினா் மீது மனுதாரா் தொடுத்த வரதட்சிணை புகாா் மற்றும் விவாகரத்து நடைமுறைகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று தீா்ப்பளித்த நீதிபதிகள், ‘திருமணத்துக்கு முன்பு இளைஞா்களும் இளம் பெண்களும் அந்தப் புனிதமான பந்தம் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com