டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்ணயிக்க நீதிமன்றம் உத்தரவு!

தேர்தல் பிரச்சாரத்தில் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த வரைமுறைகளை நிர்ணயிக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
மாதிரி படம்
மாதிரி படம்

ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நடைபெறும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த வரைமுறைகளை வரும் திங்கள்கிழமைக்குள் (மே 6) முடிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , ’பாஜக இடஒதுக்கீட்டை எதிர்க்கும்’ என்று பேசியதாக பரவி வரும் டீப் ஃபேக் காணொளி வேகமாக பரவி வரும் நிலையில் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் சிங் அரோரா அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் தேர்தல் பிரச்சாரங்களில் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த வரைமுறைகளை விரைவில் முடிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் அறிவுறுத்தியுள்ளது.

வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், தேர்தலுக்கு நடுவே இந்த வழிகாட்டுதல்களை வழங்க முடியாது எனவும், தேர்தல் குழு இந்த பிரச்னையில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தேர்தல் ஆணையத்திடம் வழக்கு குறித்த விரிவான வரைமுறைகளை தாக்கல் செய்யுமாறு மனுதாரரிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

லாயர் வாய்ஸ் (Lawyer voice) என்ற அமைப்பு முன்வைத்த இந்த மனுவில், டீப் ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்தில் தவறான தகவல்களைப் பரப்புவது, நியாயமாக தேர்தல் நடப்பதற்கான சாத்தியங்களைக் குறைக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

’கூகிள், மெட்டா (Facebook) மற்றும் எக்ஸ் கார்ப் (Twitter), உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரசியல் வேட்பாளர்கள்/ பிரதிநிதிகள்/ தலைவர்கள் போன்றவர்களின் டீப் ஃபேக் தகவல்களை தேர்தல் முடிவுகள் வரும் நாள் (ஜூன் 4) வரை அகற்றித் தடுத்திட வலியுறுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

பல நாடுகளில் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தின் மூலம் வரும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து இதனைத் தடுக்க வழி செய்துள்ளனர். உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜூன் 6 முதல் ஜூன் 9 வரை நடைபெற இருக்கும் தேர்தலின் போது டீப் ஃபேக் தொழில்நுட்ப பயன்பாட்டை தவிர்க்க, ஐரோப்பிய ஒன்றிய சாசனத்தின் கீழ் முறையான தேர்தலை நடத்த, அரசியல் கட்சிகள் உறுதியளித்துள்ளனர்’ என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் மேத்தா பேசுகையில், ”அரசியல்வாதிகள் அல்லது பொதுமக்கள் பற்றி டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பரப்பப்படும் தகவல்கள் தனிப்பட்ட முறையில் பல வழிகளில் ஆபத்தானது.

முக்கியமாக, பொதுமக்களை தவறாக வழிநடத்தி, வாக்களிப்பதில் அவர்களின் தனிப்பட்ட முடிவுகள் மீது இத்தகைய தகவல்கள் ஆதிக்கம் செலுத்தும்.

மேலும், முறைப்படுத்தப்படாத இந்த தொழில்நுட்பத்தினால் பொதுமக்கள், வேட்பாளர்கள் குறித்த உண்மை மற்றும் பொய்களை வேறுபடுத்தி பார்க்க முடியாமல் போனால், வேட்பாளர்களின் நேர்மைத்தன்மைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

தற்போதுள்ள சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களின் கட்டமைப்பு, டீப் ஃபேக் தொழில்நுட்பத்தின் தீமைகளைக் களைய போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com