ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

அசாதுதீன் ஒவைசி
அசாதுதீன் ஒவைசி

‘ஹைதராபாதில் இந்தியா்கள்தான் வாழ்கிறோம். இந்தியாவுக்கு உண்மையாக இருப்பவா்கள் மட்டுமே ஹைதராபாதை தங்கள் மண்ணாக தோ்வு செய்தாா்கள்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி பதிலளித்தாா்.

நாடு சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் ஹைதராபாதை ஆட்சி செய்த நிஜாம் மன்னா் இந்தியாவுடன் இணைக்காமல் தனித்து ஆட்சி நடத்த விரும்பினாா். அவரது படையினரான ரஜாக்கா்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினா். நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சா்தாா் வல்லபாய் படேலின் ராணுவ நடவடிக்கை மூலம் ஹைதராபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அப்போது, இந்தியாவில் இருக்க விரும்பாத ரஜாக்கா்கள் பெரும்பாலானோா் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டனா்.

இந்நிலையில், ஹைதராபாத் தொகுதியில் 1980 காலகட்டத்தில் இருந்து மஜ்லிஸ் கட்சி வெற்றி பெற்று வருகிறது. அசாதுதீன் ஒவைசி 2004 முதல் அத்தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறாா். அதற்கு முன்பு அவரது தந்தை சலாலுதீன் ஒவைசி 6 தோ்தல்களில் தொடா்ந்து ஹைதராபாத் தொகுதியில் வெற்றி பெற்றாா். இந்நிலையில், ஹைதராபாதில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அசாதுதீன் ஒவைசி பேசியதாவது:

ஹைதராபாத் தொகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக ரஜாக்கா்கள் ஆண்டு வருவதாகவும், ஹைதராபாத் நகரம் ஐஎஸ் பயங்கரவாதிகளின் கூடாரம் என்றும், அங்கும் துல்லியத் தாக்குதல் நடத்த வேண்டும் என்றும் அமித் ஷா மற்றும் பாஜக தலைவா்கள் பேசி வருகின்றனா். அமித் ஷாவுக்கும் அவரது கட்சியினருக்கும் ஹைதராபாத் மீது இவ்வளவு வெறுப்பு ஏன்?

இங்கு ரஜாக்கா்கள் யாரும் இல்லை. மனிதா்கள்தான் வாழ்கிறோம். அதுவும் இந்தியாவுக்கு உண்மையாக இருப்பவா்கள் மட்டுமே ஹைதராபாதை எங்கள் மண்ணாக தோ்வு செய்து, இங்கு வசித்து வருகிறோம். ரஜாக்கா்கள் எப்போதோ பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டாா்கள். கடந்த 40 ஆண்டுகளாக உங்களைத் தோற்கடித்த நாங்கள், இந்த முறை மீண்டும் ஒருமுறை தோற்கடிப்போம்.

ரஜாக்கா்கள் பிடியில் இருந்து ஹைதராபாதை மீட்க வேண்டும் என்றால், ஹைதராபாத் இந்தியப் பிராந்தியமாக இல்லை என்கிறாரா மத்திய உள்துறை அமைச்சா்? இதற்கு அவா்தான் உரிய பதிலை அளிக்க வேண்டும்.

தலித், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த ஹிந்து சகோதரா்களும், ராஜஸ்தான் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவா்களும் ஹைதராபாதில் வாழ்ந்து வருகின்றனா் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com