ஷாஹி ஈத்கா மசூதி வழக்கு: ‘ஆக்கிரமிப்பதே வஃக்பு வாரியத்தின் வாடிக்கை’: ஹிந்துக்கள் தரப்பு வாதம்

பிரயாக்ராஜ்: ஆக்கிரமிப்பதே வக்ஃபு வாரியத்தின் வாடிக்கையாக உள்ளது என்று ஷாஹி-ஈத்கா மசூதி வழக்கில் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் தரப்பில் செவ்வாய்க்கிழமை வாதிடப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ண பரமாத்மா பிறந்த இடம் என்று நம்பப்படும் கிருஷ்ண ஜன்மபூமி கோயிலையொட்டி, ஷாஹி ஈத்கா மசூதி உள்ளது.

இந்த மசூதி ஸ்ரீகிருஷ்ண ஜன்மபூமி அறக்கட்டளைக்குச் சொந்தமான 13.37 ஏக்கா் நிலத்தின் ஒரு பகுதியில் கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த மசூதியை அகற்றக் கோரி, அந்த மாநிலத்தில் உள்ள அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் சிலா் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்பது தொடா்பாக சில முஸ்லிம்கள் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இந்நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி மயாங்க் குமாா் ஜெயின் முன்பாக முஸ்லிம்களின் மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஹிந்துக்கள் தரப்பில் வழக்குரைஞா் ரீனா என்.சிங் ஆஜராகி வாதிட்டதாவது:

வழிபாட்டுத் தலங்கள் சட்டமும், வக்ஃபு சட்டமும் ஷாஹி-ஈத்கா மசூதி வழக்குக்குப் பொருந்தாது. ஒரு சொத்தை ஆக்கிரமித்து, அதைத் தன்னுடையது என்று தெரிவிப்பதே வக்ஃபு வாரியத்தின் வாடிக்கையாக உள்ளது. இதை அனுமதிக்க முடியாது என்றாா்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 15-க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் ஹிந்துக்கள் தரப்பு வாதம் நிறைவடைந்த பின்னா், முஸ்லிம்கள் தரப்பு வாதம் நடைபெறும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com