தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் திடீர் ரத்து: பணியாளர்கள் உடல்நல குறைவு காரணமா?
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (கோப்புப் படம்)
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (கோப்புப் படம்)

நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் 90 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமான பணியாளர்கள் தங்களின் பணி நேரம் தொடங்குவதற்கு முன்பாக திடீரென உடல்நிலை சரியில்லை என தெரிவித்ததால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலோக் சிங், “செவ்வாய்க்கிழமை மாலை முதல் 100-க்கும் மேற்பட்ட விமான பணியாளர்கள் தங்களின் பணி நேரத்துக்கு முன்பாக உடல்நிலை சரியில்லை என தெரிவித்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

அடுத்த சில நாள்களுக்கான விமான சேவை திட்டமும் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பணியாளர்கள் இல்லாத இந்த சூழலை கையாண்டாக வேண்டும் எனவும் அட்டவணைகளை மாற்றவும் சிங் ஏர் இந்தியா பணியாளர்களுக்கு அனுப்பிய குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விமானங்கள் முன் அறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெவ்வேறு விமான நிலையங்களில் திகைத்து நிற்க நேர்ந்தது.

டாடா குழுமம் நிர்வகித்துவரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகத்துடனான பணியாளர்களின் பிரச்னையே இதற்கு காரணம் என பிடிஐ தெரிவித்துள்ளது.

திருவனந்தபுர விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள்
திருவனந்தபுர விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள்ANI

பல்வேறு உயர் பொறுப்பில் உள்ள விமான ஓட்டுநர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் ஒரே நாளில் உடம்பு சரியில்லை என தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

முக்கியமாக அரபு நாடுகளுக்கு செல்லவிருந்த பயணிகள் இதனால் பெரிதும் பாதிப்படைந்துள்ளார்கள். பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு விமானம் ரத்து செய்யப்பட்டது தெரிய வந்ததால் கேரளத்தில் பயணிகள் போராட்டத்தில் இறங்கினர்.

விமான போக்குவரத்து அமைச்சகம், ஏர் இந்தியா தரப்பில் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுள்ளது. மேலும், பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் விரைவில் தீர்வு காணுமாறும் அமைச்சகம் ஏர் இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளது.

கொச்சி, கோழிக்கோடு, தில்லி மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் இருந்து புறப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் ரத்து அல்லது பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பயணம் குறித்த விவரங்களை ஏர் இந்தியாவை தொடர்புகொண்டு அறிந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயண தேதி மாற்றிக் கொள்ளுதல் அல்லது டிக்கெட் பணத்தைத் திரும்ப பெறுவதற்கான வாய்ப்பை அளிப்பதாக ஏர் இந்தியா தெரிவித்தாலும் பயணிகள் தங்களுக்கு அதுகுறித்த அப்டேட் வரவில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com