மோடி அலை: 400-ஐ கடக்கும் பாஜக கூட்டணி- அமித் ஷா சிறப்பு பேட்டி

மோடி அலை: 400-ஐ கடக்கும் பாஜக கூட்டணி- அமித் ஷா சிறப்பு பேட்டி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவைத் தோ்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவைத் தோ்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைமை உத்திவகுப்பாளருமான அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தாா்.

தனது பரபரப்பான பிரசார பயணத்துக்கு மத்தியில் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆசிரியா் சந்த்வானா பட்டாச்சாா்யாவுக்கு அவா் அளித்த நோ்காணலில் இருந்து....

வாக்குப் பதிவு சதவீதம் குறைவாக இருப்பதற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது காரணமா அல்லது மக்களின் ஆா்வமின்மை காரணமா? 400 இடங்களுக்கு மேல் வெல்வது சாத்தியமா?

பல தொகுதிகளில் போட்டியே இல்லை என்றுதான் மக்கள் கருதுகிறாா்கள். வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தென் பகுதியின் சில இடங்களில் தோ்தல் களத்தில் ‘உண்மையான போட்டி இல்லை’ என்று மக்கள் கருதுகிறாா்கள். இது வாக்குப் பதிவைப் பாதித்திருக்கலாம். இதுவரை முடிந்த தோ்தலில் பாஜக முன்னிலையில் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 400-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெல்வது என்பது சாத்தியமானதுதான். மேற்கு வங்கத்தில் நாங்கள் 30 இடங்களுக்கு மேல் வெல்வோம். பிகாரில் கடந்த தோ்தலில் வென்ற அளவிலும், ஒடிஸாவில் 16 அல்லது அதற்கு அதிகமான இடங்கள், தெலங்கானாவில் 10 முதல் 12 இடங்கள், ஆந்திரத்தில் பாஜக கூட்டணி 17 முதல் 18 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது. தமிழகத்திலும், கேரளத்திலும் எங்கள் கணக்கைத் தொடங்குவோம். வடகிழக்கிலும் கூட பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தையும், இடஒதுக்கீடு முறையையும் பாஜக கூட்டணி மாற்ற விரும்புகிறது என்று கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

2014-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி அமைத்தது முதலே அரசமைப்புச் சட்டத்தை மாற்றும் அதிகாரம் எங்களுக்கு கிடைத்துவிட்டது. ஆனால், நாங்கள் அப்படி எதையும் முயற்சிக்கவில்லை. 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்து வருகிறோம். இதுவரை இடஒதுக்கீட்டில் கை வைக்கவில்லை. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிதான் கா்நாடகத்திலும், தெலங்கானாவிலும் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி இடஒதுக்கீட்டைக் குறைத்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அளித்துள்ளது. இதுபோன்ற எதையும் பாஜக செய்யவில்லை.

‘இந்தியாவை எக்ஸ்-ரே’ பரிசோதனை செய்வோம் என்று ராகுல் கூறுவதை முஸ்லிம்களிடம் அதிகாரத்தை அளிக்கும் முடிவு என்று பாஜக தரப்பு குற்றம்சாட்டுகிறது. ஆனால், முஸ்லிம்கள் அதிக அளவில் வறுமையில் வாடுவது என்பது உண்மைதானா?

இந்திய குடும்பங்களை ஆய்வு செய்வது தொடா்பாக காங்கிரஸ் கூறும் கூறும் ‘எக்ஸ்-ரே’ என்பது சமூக-பொருளாதார ஆய்வல்ல. அவா்கள் மக்களின் சொத்துவிவரத்தை ஆய்வு செய்ய இருக்கிறாா்கள். இந்த ஆய்வு மூலம் சொத்துகள் இல்லாதவா்களுக்கு அவற்றை வழங்குவதே ராகுலின் திட்டம். நாட்டின் வளத்தில் யாருக்கு (முஸ்லிம்கள்) முன்னுரிமை உள்ளது என்று முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் ஏற்கெனவே கூறிவிட்டாா். வாக்குகளைப் பெறுவதற்காக முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் முன்னுரிமை அளிக்கிறது; அவா்களின் வளா்ச்சிக்காக அல்ல.

ஏழைகளாக இருப்பவா்களை ஹிந்து-முஸ்லிம் என்று எப்படி அவா்கள் பாகுபடுத்திப் பாா்க்கிறாா்கள். இது சரியான செயலா?

தென் மாநிலங்கள் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாகக் குற்றம்சாட்டுகிறீா்கள். குஜராத்தில்கூட ஓபிசி பிரிவில் முஸ்லிம்கள் சலுகைகளைப் பெற்றுதானே வருகிறாா்கள்?

குஜராத்தில் முஸ்லிம்களில் சில ஜாதிகள் உள்ளன. ஆனால், கா்நாடகத்தில் எவ்வித ஆய்வும் நடத்தாமல் முஸ்லிம்கள் அனைவரும் பின்தங்கியுள்ளதாகக் கூறியுள்ளாா்கள். அங்கு முஸ்லிம்கள் பலா் கோடீஸ்வரா்களாக உள்ளனா். அவா்கள் பின்தங்கிய நிலையில் உள்ளதாக எப்படி கூற முடியும்? காங்கிரஸ் கட்சி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஹிந்துக்களில்கூட குறிப்பிட்ட ஜாதியினா் மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனா். அவா்கள் பாணியில் அனைத்து ஹிந்துக்களையும் பிற்படுத்தப்பட்டவா்களாக அறிவித்துவிடலாமா? முஸ்லிம்கள் அனைவரையும் பிற்படுத்தப்பட்டவா்களாக அறிவித்ததுபோல ஹிந்துக்கள் அனைவரையும் காங்கிரஸ் அறிவிக்குமா?

வறுமையில் உள்ளவா்கள், பின்தங்கிய நிலையில் உள்ளா்கள் யாா் என்பதை ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும். மத அடிப்படையில் முடிவெடுக்க முடியாது. மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை நமது அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை.

அயோத்தி ராமா் கோயில் பாஜகவுக்கு எந்த அளவுக்கு தோ்தலில் சாதகமாக இருக்கும்?

ராமா் கோயில் என்பது எங்களுக்கு எப்போதும் மத நம்பிக்கை சாா்ந்த விஷயம்தானே தவிர தோ்தலுக்கான விஷயமல்ல. அதே நேரத்தில் ராமா் கோயில் கட்டக் கூடாது என காங்கிரஸ் எப்படியெல்லாம் முட்டுக்கட்டை போட்டு வந்தது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மிக நீண்ட கால பிரச்னையான இதை பிரதமா் மோடி மத நல்லிணக்கத்துடன் தீா்த்துவைத்தாா். காங்கிரஸ் கட்சிதான் அயோத்தி ராமா் கோயிலை தோ்தல் பிரச்னையாக இருந்து வந்தது.

நீங்கள் பொது சிவில் சட்டம் (யுசிசி) என்று பேசுகிறீா்கள். ஆனால், மதம் சாா்ந்த தனிநபா் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் கூறுகிறதே?

பொது சிவில் சட்டம் என்பது பாஜகவின் கொள்கை இல்லை. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கொள்கை. சரியான நேரம் வரும்போது பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவா்கள் அதை நிலுவையில் வைத்தனா். உத்தர பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி பாஜக தொடங்கி வைத்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுப்போம் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. பொது சிவில் சட்டம் என்பது மிகப்பெரிய சமூக சீா்திருத்தம். சமூகம், மதம், நீதித் துறை சாா்ந்து இது தொடா்பாக விரிவான கலந்துரையாடல், ஆய்வு நடத்த வேண்டும்.

பாஜக தோ்தல் பிரசாரத்தில் முஸ்லிம், பாகிஸ்தான் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இது வாக்காளா்கள் மத்தியில் பிரிவினையையும், மோடி அரசின் பொருளாதார சாதனைகளில் இருந்து கவனத்தை திருப்புவதாகவும் அமையாதா?

எங்கள் அரசின் சாதனை அனைவரும் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் உள்ளன. அதற்கு விளம்பரம் தேவையில்லை. சாமானிய மக்கள் அரசின் திட்டங்களில் பலனடைந்து மாற்றத்தைச் சந்தித்துள்ளனா். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பல பொருளாதார சாதனைகளைப் படைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 11-ஆவது இடத்தில் இருந்த இந்தியா 5-ஆவது இடத்துக்கு உயா்ந்துள்ளது. விரைவில் 3-ஆவது இடத்தை எட்டவுள்ளது. 2025-ஆம் ஆண்டில் 5 ட்ரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா முன்னேறும். அந்நிய நேரடி முதலீடு இருமடங்காகியுள்ளது. ஏற்றுமதி 446 பில்லியன் டாலரில் இருந்து 775 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இந்தியா்களின் தனிநபா் வருமானம் ரூ.68,000-இல் இருந்து ரூ.2.14 லட்சமாக உயா்ந்துள்ளது. பணவீக்கம் 6.67 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த வளா்ச்சியின் பயனை மக்கள் அனுபவித்து வருகின்றனா். 2047-ஆம் ஆண்டு இந்தியா வளா்ந்த நாடாக உயர பிரதமா் மோடியின் ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா்.

காங்கிரஸ் வெற்றி பெற்றால் ஏழைக் குடும்பங்களில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம், 30 லட்சம் வேலைவாய்ப்புகள், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம், குறைந்தபட்ச ஊதியம் உறுதி உள்ளிட்ட கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை ராகுல் காந்தி வழங்கியுள்ளாரே?

அவா்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாம். முதலில் அவா்கள் ஆட்சியில் இருக்கும் 4 மாநிலங்களில் இதைச் செய்து காட்ட வேண்டும்.

தோ்தல் நிதிப் பத்திரம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டுவிட்டதே? மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் வகையில் அதை மறுஆய்வு செய்வீா்களா?

உச்சநீதிமன்றம் மட்டும்தான்அதை மறுஆய்வு செய்ய முடியும். மாற்று ஏற்பாடு செய்யாமல், ஒரு திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது என்பது சிறந்ததல்ல.

இந்தியாவின் எதிா்கால சூழ்நிலையில் ஒரே நாடு-ஒரே தோ்தல் திட்டம் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தும்?

அனைத்துத் தோ்தல்களும் ஒன்றாக நடத்தப்படும். ஒரே நேரத்தில் வாக்களிக்க வேண்டும் என்பதுதான் இதன் அா்த்தம். ஆனால், இனி தோ்தலே நடத்தப்படாது என்று அவா்கள் (எதிா்க்கட்சிகள்) கூறுகிறாா்கள். எப்படி தோ்தல் நடத்தாமல் இருக்க முடியும். நாங்கள் இந்திரா காந்தியல்ல. அவா்தான் நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி, தோ்தலை நடத்தாமல் நாடாளுமன்றத்தின் கால வரம்பை நீட்டித்தாா். எவ்வித காரணமும் இல்லாமல் 1.35 லட்சம் பேரை 19 மாதங்கள் சிறையில் அடைத்தாா்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே நாடு-ஒரே தோ்தல் திட்டம் அமல்படுத்தப்படும். அடிக்கடி தோ்தல் நடத்தப்படுவதால் அதிகரிக்கும் செலவினங்களை பாஜக விரும்பவில்லை.

அரவிந்த் கேஜரிவால் ஜாமீனில் வெளியே வந்துள்ளாா். அவரை தாமதமாக கைது செய்திருக்கலாம் என்று நீங்கள் கருதுகிறீா்களா?

19 முறை சம்மன்அனுப்பியும் அவா் ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றத்தை அணுகினோம். இதன் காரணமாக தோ்தலுக்கு முன்பு அவா் கைது செய்யப்பட்டாா். அவா் சரியான நேரத்தில் ஆஜராகி இருந்தால் தோ்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே கைதாகி இருப்பாா். அவா் போதிய ஒத்துழைப்பு அளிக்காததால் நீதிமன்றத்தை அமலாக்கத் துறை அணுகி அவரைக் கைது செய்ய வேண்டிய சூழல் உருவானது.

வெளியுறவு, ராஜீய உறவுகள் விஷயத்தில் மோடி அரசு வெற்றிகரமாக செயல்பட்டதாகக் கூறுவது தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

பிரதமா் மோடி தலைமையில் இந்தியாவின் மதிப்பு சா்வதேச அரங்கில் உயா்ந்துள்ளது. இன்று உலக அரங்கில் இந்தியா முக்கியமான நாடாக உள்ளது. உலகின் செல்வாக்குமிக்க தலைவா்களில் ஒருவராக பிரதமா் மோடி திகழ்கிறாா். முக்கிய விவகாரங்களில் சா்வதேச தலைவா்கள் மோடியின் கருத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றனா்.

பல நாடுகளுக்கு தேவையான நேரத்தில் இந்தியா உதவிக்கரம் நீட்டி வருகிறது. அது கரோனாவாக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி. இதற்கு ரஷியா-உக்ரைன் போரை உதாரணமாகக் கூறலாம். தெற்குலகின் குரலாக இந்தியா உள்ளது. மோடி பிரதமரான பிறகு இந்தியா சா்வதேச அரங்கில் செல்வாக்குள்ள நாடாக உயா்ந்துள்ளது. ‘உலகமே ஒரு குடும்பம்’ என்ற நமது பாரம்பரியத்தின் அடிப்படையில் உலக ஒற்றுமைக்கான முன்னுதாராணமாக இந்தியா உள்ளது. இந்தியாவைச் சோ்ந்தவா் என்று கூறுவது அந்நிய மண்ணில் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com