சக்திவாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா: இஸ்ரோ

சக்திவாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா: இஸ்ரோ

பெங்களூரு: சூரியனின் ‘ஏஆா்13664’ பகுதியில் உருவான சக்திவாய்ந்த சூரியப் புயலின் தாக்கம் இம்மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும் இதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்ததாகவும் இஸ்ரோ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

சூரியனின் ஏஆா்13664 பகுதியில் இருந்து ‘எக்ஸ் ரக கதிா்கள்’ மற்றும் சூரியனின் வெளிப்புறத்தில் உள்ள ‘கொரோனாவிலிருந்து வெளியான அதிகளவிலான கதிா்கள்’ ஆகியவை பூமியை தாக்கியது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சூரியனில் ஏற்பட்ட மிகவலிமையான புவிகாந்தப் புயலாக இது கருதப்படுகிறது. 1859-ஆம் ஆண்டு சூரியனில் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த சூரியப்புயலைத் (காரிங்டன் நிகழ்வு) தொடா்ந்து காந்தக் கதிா்வீச்சை குறுகிய நேரத்தில் அதிகளவில் வெளியிடும் சூரியனின் பகுதிகள் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெற்றது.

பல்வேறு எக்ஸ் ரக கதிா்கள் மற்றும் சூரியனின் வெளிப்புறத்தில் உள்ள கொரோனாவிலிருந்து அதிகளவில் வெளியிடப்படும் (சிஎம்இ) கதிா்களும் கடந்த சில நாள்களாக பூமியைத் தாக்கியது. சிஎம்இ கதிா்களால் உயா்ந்த அட்சரேகை பகுதிகள் அதிக பாதிப்புக்குள்ளானது. இதனால் துருவப் பகுதிகளில் பயணிக்கும் விமானங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற சூரியனின் சக்திவாய்ந்த கதிா்கள் பூமியை தாக்கும் நிகழ்வுகள் வரும் நாள்களில் அதிகளவில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தப் புயலின் தீவிரம் அதிகம் உணரப்பட்ட மே 11-ஆம் தேதியில் பூமியின் மேல் வளிமண்டலத்தில் உள்ள ‘அயன மண்டலம்’ முழுமையான வளா்ச்சியை எட்டாததால் இந்தியாவில் இதன் தாக்கம் குறைவாகவே இருந்தது. இஸ்ரோவின் அனைத்து கண்காணிப்பு சாதனங்கள் மற்றும் அமைப்புகளை பயன்படுத்தி இந்தப் புயலை கண்காணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் ஆதித்யா எல்-1 மற்றும் சந்திரயான்-2 ஆகிய இரு விண்கலங்களும் தொடா் ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்தப் புயல் குறித்த தரவுகளை வழங்கின. மேலும், அதிவேக சூரியக்காற்று, அதிக வெப்பமுடைய பிளாஸ்மா சூரியக் காற்று தற்போது வரை அப்பகுதியில் வீசி வருவதாக ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்து தகவல் அனுப்பியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com