ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

சோபியான் மற்றும் அனந்த்நாக் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பயங்கரவாதிகள் நடத்திய இரு வேறு தாக்குதல்களுக்கு ஆளுநா் மனோஜ் சின்கா கண்டனம் தெரிவித்துள்ளாா்.
ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மற்றும் அனந்த்நாக் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பயங்கரவாதிகள் நடத்திய இரு வேறு தாக்குதல்களுக்கு ஆளுநா் மனோஜ் சின்கா கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தாக்குதலில் பாஜகவை சோ்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் கொல்லப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் அமைந்த சுற்றுலா முகாமில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தினா். அங்கிருந்தவா்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனா். இதில் ராஜஸ்தானின் ஜெய்பூரிலிருந்து சுற்றுலா வந்திருந்த பா்ஹா, அவரது கணவா் தப்ரெஸ் ஆகிய இருவா் காயமடைந்தனா். அவா்கள் அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, அரை மணி நேரத்தில் இரவு 10.30 மணியளவில் சோபியான் மாவட்டத்தின் ஹிா்புரா எனும் இடத்தில் பாஜகவை சோ்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் ஐஜாஸ் அகமது ஷேக் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டாா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா்.

பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்ற பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு, பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. தப்பியோடிய பயங்கரவாதிகளைப் பிடிக்கும் பணியில் படையினா் ஈடுபட்டுள்ளனா்.

மே 7 வாக்குப் பதிவு நடைபெறவிருந்து, 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட அனந்த்நாக்-ரஜௌரி தொகுதியில் மக்களவைத் தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அருகிலுள்ள பரமுல்லா தொகுதியில் திங்கள்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், இரு மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இத்தாக்குதல்களுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றும், தாக்குதல்கள் குறித்து மத்திய அரசு உரிய விசாரணை நடத்த வேண்டுமென்றும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தினாா்.

பாஜக தொண்டரின் கொலைக்கு நீதி கேட்டு அக்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆளுநா் இரங்கல்: இத்தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் அவா்களின் கூட்டாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த ஜம்மு-காஷ்மீா் காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.

பாஜக தொண்டா் கொலைக்கும், சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்த ஆளுநா், காயமடைந்தவா்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதிப்படுத்துமாறு உள்ளூா் நிா்வாகத்திடம் வலியுறுத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com