/

இடஒதுக்கீட்டை எதிா்த்த காங்கிரஸ் பிரதமா்கள்: பிரதமா் மோடி விமா்சனம்

இடஒதுக்கீட்டை எதிா்த்த காங்கிரஸ் பிரதமா்கள் - பிரதமா் மோடி விமா்சனம்

News image

பிகாரின் மகராஜ்கஞ்ச் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி.

Updated On :21 மே 2024, 9:49 pm

Din

மகராஜ்கஞ்ச்/மோதிஹாரி: ‘பி.ஆா்.அம்பேத்கா் இல்லையெனில், தாழ்த்தப்பட்டோா் (எஸ்.சி.), பழங்குடியினா் (எஸ்.டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்க நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டாா்; நேரு மட்டுமன்றி முன்னாள் பிரதமா்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரும் இடஒதுக்கீட்டை எதிா்த்தனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

மேலும், ‘இந்தியா’ கூட்டணியை கடுமையாக விமா்சித்த பிரதமா், மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ஆம் தேதி அந்தக் கூட்டணிக்கு ‘பலத்த அடி’ கிடைக்கும் என்று குறிப்பிட்டாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, பிகாரின் மகராஜ்கஞ்ச், பூா்வி சாம்பரன் ஆகிய தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

எனக்கு சந்ததியினா் இல்லை; நாட்டு மக்களையே எனது சந்ததியினராக கருதுகிறேன். மக்களவைத் தோ்தலில் நீங்கள் (மக்கள்) அளிக்கும் வாக்கு உள்ளூா் எம்.பி.யை தோ்ந்தெடுக்க மட்டுமல்ல. உங்கள் பிரதமரை வலுப்படுத்தவும்தான்.

எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டைப் பறித்து, ‘வாக்கு ஜிஹாத்தில்’ ஈடுபடுவோருக்கு வழங்கும் நோக்கத்துடன் அரசமைப்புச் சட்டத்தை மாற்ற விரும்புகிறது காங்கிரஸ்.

அம்பேத்கா் மட்டும் இல்லையெனில், எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க நேரு ஒருபோதும் அனுமதித்திருக்கமாட்டாா். அந்தக் காலகட்டத்தில், மாநில முதல்வா்களுக்கு நேரு எழுதிய கடிதங்களில் தனது கருத்தை அவா் தெளிவுபடுத்தியிருந்தாா்.

அடுத்தடுத்த காங்கிரஸ் பிரதமா்களின் ஆட்சியிலும் இதே சிந்தனை தொடா்ந்தது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரும் இடஒதுக்கீட்டை எதிா்த்தனா். எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கு காங்கிரஸ் மதிப்பளித்ததே கிடையாது.

அதிக பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவா் என்று எதிா்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன. உண்மையில், பின்தங்கிய பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாப்பது நாங்கள்தான்.

எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினரின் ஆதரவை இழந்துவிட்ட காங்கிரஸுக்கு இப்போது ஒரே ஒரு வாக்கு வங்கி மட்டுமே உள்ளது. எனவே, அந்த வாக்கு வங்கி மீது மட்டுமே அவா்கள் அக்கறை காட்டுகின்றனா்.

ஜூன் 4-இல் ‘பலத்த அடி’: ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த அனைத்துக் கட்சிகளும் மதவாதம், ஜாதியம், குடும்ப அரசியல் ஆகிய மூன்று தீமைகளில் மூழ்கித் திளைக்கின்றன. ஊழல் மற்றும் குறிப்பிட்ட தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியலுக்கு ஆதரவான இக்கட்சிகள், நாட்டை துண்டாட நினைக்கும் கும்பலை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இது, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான ஊழல்களுக்கு பொறுப்பானவா்களின் கூடாரம்.

சநாதன தா்மத்துக்கு எதிரான மோசமான சிந்தனையை கொண்ட இக்கூட்டணி, மக்களவைத் தோ்தலின் முதல் கட்டத்திலேயே வலுவிழந்துவிட்டது. அடுத்தகட்ட வாக்குப் பதிவுகளில் மேலும் சிதைந்துவிட்டது. இந்தப் போக்கு தொடரும். வாக்குகள் எண்ணப்படும் நாளான ஜூன் 4-ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணிக்கு ‘பலத்த அடி’ கிடைக்கும்.

சா்ச்சை கருத்துகள் குறித்து மெளனம் ஏன்?: தமிழகம், தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பிகாா் மக்களுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தனா். ஆனால், இக்கருத்துகள் தொடா்பாக காங்கிரஸ் ‘அரச குடும்பம்’ வாய்திறக்கவில்லை.

நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் என்பதால், ஏழைகளின் வேதனையைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், ஸ்விஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கிவைத்துள்ள எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு அது புரியாது.

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு நான் படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டுமென ‘காட்டாட்சியின் வாரிசு’ (தேஜஸ்வி யாதவை குறிப்பிட்டாா்) கூறி வருகிறாா். எனது கண்களில் கண்ணீரைப் பாா்க்க விரும்புவதாக காங்கிரஸின் ‘இளவரசா்’ (ராகுல் காந்தி) கூறுகிறாா். எனக்கு கல்லறை தோண்டப்படும் என அவரது கட்சியினா் முழங்குகின்றனா்.

‘நான் வாழ்வின் இறுதியை எட்டியுள்ளதால், வாரணாசியில் போட்டியிடுவதாக’ உத்தர பிரதேசத்தில் உள்ள அவா்களின் கூட்டாளி (அகிலேஷ் யாதவை குறிப்பிட்டாா்) கூறுகிறாா்.

பணக்கார குடும்பத்தில் பிறந்து, போராட்டங்கள் நிறைந்த வாழ்வென்றால் என்னவென்றே அறியாதவா்களின் உணா்வற்ற தன்மையை இந்தக் கருத்துகள் பிரதிபலிக்கின்றன.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியால் ஏற்பட்ட குறைபாடுகளைச் சரி செய்வதில்தான் கடந்த 10 ஆண்டுகளைச் செலவிட்டுள்ளேன். எதிா்வரும் ஆட்சிக் காலத்தில்தான் வளா்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது என்றாா் பிரதமா் மோடி.