
மக்களவைத் தேர்தலின் 5 கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்கனவே 310 இடங்களில் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
ஒடிசா மாநிலத்தை பாபு ராஜிடம் (நவீன் பட்நாயக்) இருந்து கைப்பற்றி மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவை ஆட்சி அமைக்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை கூறினார்.
சாம்பல்பூரில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஆதரித்து தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டங்களில் பேசிய அமித் ஷா, "இம்முறை ஒடிஸாவில் தாமரை மலரும் என்றார்.
5 கட்ட வாக்குப் பதிவுக்குப் பின் தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே 310 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஆறாவது மற்றும் ஏழாவது சுற்று வாக்குப்பதிவுக்குப் பிறகு நாங்கள் 400-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவோம்.
ஒடிஸாவை "சில அதிகாரிகள்" ஆளுகிறார்கள் என வி.கே.பாண்டியனை குற்றஞ்சாட்டிய அமித் ஷா, இந்த தேர்தல் மாநிலத்தில் நடந்து வரும் "பாபுராஜ்" க்கு (நவீன் பட்நாயக்) முற்றுப்புள்ளி வைக்கும் என்றார்.
நாட்டின் பெரும்பாலான சுரங்கங்கள், கனிம வளங்கள் ஒடிஸாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், கியோஞ்சர் பழங்குடியினருக்கு எந்தப் பலனும் இல்லை.
நாடு முழுவதும் பயங்கரவாதம் இல்லை என்பதை மோடி உறுதி செய்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது. பாகிஸ்தான் அணுகுண்டு வைத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மோடி தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். இதுபோன்ற அணுகுண்டு அச்சுறுத்தலுக்கு அவர் அஞ்சவில்லை.
காங்கிரஸ் தங்கள் ஆட்சிக்காலத்தில் பழங்குடியினருக்கு எதுவும் செய்யவில்லை.
ஒடிஸா, ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நக்சலைட்டுகளை ஒழிக்க பிரதமர் மோடி பாடுபட்ட நிலையில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜபேயி பழங்குடியினர் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கினார்.
மாவட்ட கனிம அறக்கட்டளை அமைத்து, பழங்குடியினர் பகுதியின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
மோடியின் ஆட்சியில் பழங்குடியினர் விவகாரங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது வழங்கப்பட்ட 25,000 கோடி ரூபாயில் இருந்து 1.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பாஜக அரசு ஒரு லட்சம் மாணவர்கள் படிக்கும் 740 பள்ளிகளை அமைத்துள்ளது. இந்தப் பள்ளிகளில் சுமார் 40,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கியோஞ்சரில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, சாம்பல்பூரில் மற்றொரு 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
ஒடிசாவின் பெருமை, மொழி, கலாசாரம், பாரம்பரியத்தை பிஜு ஜனதா தள(பிஜேடி) அரசு அவமதிக்கிறது.
பாஜகவுக்கு வாக்களித்தால், இளம், கடின உழைப்பாளி மற்றும் ஆற்றல்மிக்க ஒடிஸாவின் ‘பூமிபுத்ரன்’ (மண்ணின் மகன்) முதல்வராக்கப்படுவார்.
புதிய பாஜக அரசு ஒன்றரை ஆண்டில் இரண்டு லட்சம் பேருக்கு வேலை வழங்கும்.
ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், அதிகாரிகளை ஆட்சியில் வைத்து, மாநிலத்தின் கலாசாரத்தையும் பெருமையையும் குலைத்து வருகிறார்.
விரைவான வளர்ச்சி, வளமான கலாசாரத்தைப் பாதுகாப்பதை உறுதிசெய்ய மாநிலத்தில் பாஜக ஆட்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால், மண்ணின் மகன் (பூமிபுத்திரன்), உத்கல பூமியை (ஒடிஸா) ஆள்வார்.
ஜெகன்நாதர் கோவிலை வணிக மையமாக மாற்ற பிஜேடி அரசு விரும்புகிறது. புரியில் உள்ள மடங்கள், கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் எந்தக் கல்லையும் விட்டு வைக்காமல் கனிம வளங்களைக் கொள்ளையடிக்கிறார் முதல்வர் நவீன் பட்நாயக். ஒடிஸாவில் கனிம வளங்கள் அதிகம் இருந்தாலும், மாநிலத்தின் வளங்களை பாதுகாக்கும் முதல்வர் இல்லை. பிஜேடி அரசு மேற்கு ஒடிசாவையும் புறக்கணித்துள்ளது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளின் சமமான வளர்ச்சிக்கு பாஜக உறுதிபூண்டுள்ளது" என்றார் அமித் ஷா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.