
கேரளத்தில் இன்றும், நாளையும் (மே 21, 22) அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அம்மாநிலத்துக்கு சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கேரளத்திலும் புதுச்சேரியின் மாஹேவிலும் ஓரிரு இடங்களில் 200 மில்லிமீட்டருக்கும் மேல் மழை பதிவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களுக்கு இன்று(மே 21) அதி கனமழைக்கான ’சிவப்பு எச்சரிக்கை’யும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ’ஆரஞ்ச் எச்சரிக்கை’யும் விடப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ’மஞ்சள் எச்சரிக்கையும்’ விடப்பட்டுள்ளது.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களிலும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மலையோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
பேரிடரை எதிர்கொள்ள தயாராக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரகால செயல்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டு, ஆயத்த நிலையில் இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும், கேரளத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வட மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும், இதன்காரணமாக தில்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹிமாசல பிரதேசம், உத்தராகண்ட், மத்திய பிரதேசம், ஒடிஸா, குஜராத் ஆகிய வட மாநிலங்களுக்கு இன்று(மே 21) சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.