தில்லியின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை: 
இந்திய வானிலை ஆய்வு மையம்

தில்லியின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை: இந்திய வானிலை ஆய்வு மையம்

Published on

புது தில்லி: தில்லியில் தொடா்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதால் கடும் வெப்பத்தில் தத்தளித்து வருகிறது.

இதனிடையே தில்லியின் பல பகுதிகளில் வெப்ப அலை இருக்கும் என்றும் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை இருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) என்றும் கணித்துள்ளது.

மேலும், தலைநகரில் அடுத்த நான்கு நாள்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஏழு நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை 44 முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 4 டிகிரி உயா்ந்து 30.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 2.2 டிகிரி உயா்ந்து 42.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 62 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 34 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் ஐடிஓ, பூசா, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், பஞ்சாபி பாக் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், நியூ மோதி பாக், இந்திரா காந்தி சா்வதே விமானநிலையம், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘மிதமான‘ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (மே 22) வெப்ப அலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com