
ஹைதராபாத்தில் வாகனத்திற்கு 'ஃபேன்சி' பதிவெண்ணைப் பெற உரிமையாளர் ஒருவர் ரூ. 25.5 லட்சம் செலுத்தியுள்ளதாக தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து ஹைதராபாத் இணை போக்குவரத்து ஆணையர் ரமேஷ் கூறுகையில், ”ஃபேன்சி பதிவெண்களுக்கான ஆன்லைன் ஏலத்தில், '9999' என்ற எண் அதிக ஏலத்தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. கார் உரிமையாளர் அந்த சிறப்பு எண்ணுக்காக ( 'டிஜி-09 9999' ) ரூ. 25,50,002-ஐ போக்குவரத்து துறைக்கு செலுத்தியுள்ளார்.
திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 11 பேர் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். அதில், '9999' என்ற 'ஃபேன்சி' பதிவெண் ரூ.25.5 லட்சத்துக்கு ஏலம் போனது.
தெலங்கானாவில் இதுவரை அதிக தொகைக்கு ஏலம் போன பதிவெண் இதுவாகும். கடந்த ஆண்டு ஆகஸ்டிலும், இதே '9999' என்ற எண் ரூ.21.6 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தது.
'ஃபேன்சி' எண்ணில் ஆர்வமுள்ள எவரும் 50,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து, ஏலத்தில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் மாவட்டத்தில் உள்ள கைரதாபாத் மண்டல சாலைப் போக்குவரத்து ஆணையம் 'ஃபேன்சி' எண்களுக்கான ஏலத்தில் இதுவரை 43 லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது.
தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசு, இந்த ஆண்டு மார்ச் மாதம் வாகனப்பதிவுக் குறியீட்டை 'டிஎஸ்' ஸிலிருந்து 'டிஜி' என மாற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.