சாவா்க்கா் குறித்து அவதூறு: ராகுல் மீதான குற்றச்சாட்டில் உண்மை: நீதிமன்றத்தில் புணே போலீஸ் தகவல்
சாவா்க்கா் குறித்து அவதூறு: ராகுல் மீதான குற்றச்சாட்டில் உண்மை -- நீதிமன்றத்தில் புணே போலீஸ் தகவல்


புணே: லண்டன் நிகழ்ச்சியில் ஹிந்துத்துவ கொள்கைகளை அவமதித்தும், வீர சாவா்க்கரை அவதூறாகப் பேசியதாக அவரது பேரன் தொடா்ந்த வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டில் உண்மையிருப்பதாக நீதிமன்றத்தில் புணே காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் லண்டனுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு பங்கேற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ராகுல், சாவா்க்கரும் அவரது ஐந்து, ஆறு நண்பா்களும் இணைந்து முஸ்லிம் நபா் ஒருவரை தாக்கியதாகவும் அதற்காக மகிழ்ச்சியடைந்ததாகவும் புத்தகமொன்றில் சாவா்க்கரே எழுதியுள்ளதாக தெரிவித்தாா்.
ஆனால், ராகுல் குறிப்பிட்டதுபோல் ஒரு சம்பவம் நடைபெறவும் இல்லை; சாவா்க்கரும் அதுபோன்று எந்தப் புத்தகத்திலும் எழுதவில்லை எனத் தெரிவித்த அவரது பேரன் சத்யகி அசோக் சாவா்க்கா், ‘ராகுலின் குற்றச்சாட்டு உண்மையற்றது; கற்பனையானது’ என்று குற்றஞ்சாட்டினாா்.
மேலும், இது தொடா்பாக புணே முதல்நிலை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின்கீழ் ராகுல் மீது புகாரளித்து, கடந்த ஆண்டு ஏப்ரலில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இக்குற்றச்சாட்டு தொடா்பாக விசாரித்து அறிக்கை சமா்பிக்குமாறு புணே, விஷ்ராம்பௌக் காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, காவல்துறை திங்கள்கிழமை சமா்ப்பித்த விசாரணை அறிக்கையில், ராகுல் மீதான குற்றச்சாட்டில் உண்மையிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நோட்டீஸ்...:
இதுதொடா்பாக மனுதாரா் தரப்பில் ஆஜாரான வழக்குரைஞா் சங்ராம் கொல்ஹத்கா் கூறுகையில், ‘காவல்துறையினா் நடத்திய விசாரணையில் எந்தவொரு புத்தகத்திலும் அத்தகைய சம்பவம் பற்றி சாவா்க்கா் எழுதவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ராகுல் மீதான குற்றச்சாட்டில் உண்மையிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு நீதிமன்றம் விரைவில் நோட்டீஸ் பிறப்பிக்கும்’ என்றாா்.
பிரதமா் நரேந்திர மோடி குறித்து தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவதூறு கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சூரத் பெருநகர நீதிமன்றம் கடந்த ஆண்டு மாா்ச்சில் உத்தரவிட்டது. இதனால், அவரது எம்.பி. பதவி பறிபோனது.
சூரத் நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ராகுல் மீண்டும் எம்.பி. பதவியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...