
வடகிழக்கு மாநிலங்களில் 'ரீமெல்' புயல் செவ்வாய்க்கிழமையன்று பேரழிவை ஏற்படுத்தியதில் 14 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், நிலச்சரிவும் ஏற்பட்டது.
மிஸோரமில் மாநில தலைநகர் ஐஸ்வாலின் புறநகரில் உள்ள மெல்தும், ஹ்லிமென் இடையேயான பகுதியில் காலை 6 மணியளவில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் 12 பேர் பலியாகினர். மேலும் சிலர் காணவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பலியானவர்களில் ஏழு பேர் உள்ளூர்வாசிகள் எனவும், மேலும் மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவத்தில், ஐஸ்வாலில் வீடு நிலச்சரிவினால் தரைமட்டமானதில் 3 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல், மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மிஸோரம் முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அலுவலகங்கள் தவிர அனைத்து அரசு அலுவலகங்களையும் இன்று(மே 28) மூட மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
இதேபோல, அஸ்ஸாமில் பெய்த கனமழைக்கு கம்ரூப், மோரிகான் மாவட்டங்களில் 2 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.
அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ஏஎஸ்டிஎம்ஏ) தகவலின்படி, சோனிட்பூர் மாவட்டத்தின் தெகியாஜூலியில் பள்ளி பேருந்து மீது மரத்தின் கிளை விழுந்து 12 மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஒடிஸாவிலிருந்த அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா கனமழையால் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், காயமடைந்தவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கவும் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
போங்கைகான், சிராங், தர்ராங், துப்ரி, ஹோஜாய், கம்ரூப், கம்ரூப் மெட்ரோ, கர்பி ஆங்லாங், கோக்ரஜார், மோரிகான், நாகோன், சோனிட்பூர், தெற்கு-சல்மாரா, மேற்கு கர்பி அங்லாங் போன்ற 14 மாவட்டங்களில் புயல் பாதிப்பு ஏற்பட்டதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அஸ்ஸாமில் உள்ள 8 மாவட்டங்களுக்கும், திரிபுராவில் 3 மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு நேற்றும், இன்றும் (மே 27, 28) வடகிழக்கு பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.