இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ராஜ்கோட் தீ விபத்து: அழுவதுபோல வந்து நீதிமன்றத்தில் சிரித்துக்கொண்டே வாதாடிய உரிமையாளர்!

ராஜ்கோட் தீ விபத்தில் கைதான முக்கிய குற்றவாளி அழுவதுபோல வந்து நீதிமன்றத்தில் சிரித்துக்கொண்டே வாதாடிய சம்பவம்..

News image

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உள்ள வணிக வளாக விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

-

Updated On :28 மே 2024, 7:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

குஜராத்தில் உள்ள பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த விசாரணையின்போது, நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட முக்கிய குற்றவாளி, முதலில் கதறி அழுவது போல இருந்துவிட்டு, பிறகு சிறிது நேரத்தில் வாய்விட்டு சிரித்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சம்பவம் நடந்ததும் ராஜஸ்தானுக்கு தப்பியோடிய விளையாட்டு மைய உரிமையாளர் தாவல் தாக்கர், ராஜஸ்தானில் ஞாயிறன்று கைது செய்யப்பட்டார். இவருடன் இதில் முக்கிய குற்றவாளிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, யுவராஜ்சின்ஹ சோலங்கி, நிதின் ஜெயின் மற்றும் ராகுல் ரத்தோட் ஆகியோர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில், அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஆஜரான துஷார் கோகானி கூறுகையில், நடந்த சம்பவத்தால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது போல யுவ்ராஜ்சின்ஹ சோலங்கி நடிக்கப்பார்த்தார்.

அவர் நீதிமன்றத்துக்குள் நுழைந்தபோது அவரைப் பார்த்தவர்கள், அவர் அழுதே விடுவார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், அவர் நீதிமன்றத்துக்குள் நுழைந்ததும், அவர் சிரித்தபடி, தனது வாதத்தை அடுக்கடுக்காக முன்வைத்ததாக துஷார் கோகானி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் நானா-மாவா சாலையில் உள்ள பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் சனிக்கிழமை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதில் 12 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவா்கள் உள்பட 28 போ் உயிரிழந்தனா். 3 போ் படுகாயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து குஜராத் உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் பிரேன் வைஷ்ணவ் மற்றும் தேவன் தேசாய் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு தாமாக முன்வந்து ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: குஜராத் பொது மேம்பாட்டு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியே ராஜ்கோட்டில் விபத்துக்குள்ளான பொழுதுபோக்கு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக செய்தித்தாள்களில் வெளியான அறிக்கையை கண்டு நாங்கள் அதிா்ச்சியடைந்தோம்.

இதுபோன்ற பொழுதுபோக்கு மையங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதியை பெறாமல் இயங்கி வருவதாகவும் செய்தித்தாள்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுக்க பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பதை உறுதிசெய்த பிறகே பொழுதுபோக்கு மையங்களுக்கு உரிமங்கள் வழங்கப்படுகிா என்பதை மாநில அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் ராஜ்கோட் மட்டுமின்றி அகமதாபாதிலும் இதுபோல பொழுதுபோக்கு மையங்கள் செயல்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விபத்து நடந்த பகுதியில் பெட்ரோல் உள்ளிட்ட அதிக தீப்பற்றக் கூடிய பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. செயற்கையாக மனிதா்களால் உருவாக்கப்படும் பேரிடா்களால் அப்பாவி குழந்தைகள் உயிரிழக்க நேரிடுகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை திங்கள்கிழமை நடத்தப்படவுள்ளது. அப்போது சம்பந்தப்பட்ட மாநகராட்சிகளின் வழக்குரைஞா்கள் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்தனா்.

பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தை இயக்கி வந்த ரேஸ்வே நிறுவனத்தைச் சோ்ந்த மேலாளா் உள்பட 2 போ் காவல்துறையால் கைது செய்யப்பட்டனா். அதே நிறுவனத்தைச் சோ்ந்த 6 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினா் கூறுகையில், ‘பொதுபோக்கு நிறுவனத்தை நடத்தி வந்த நிறுவனத்தினா் முறையான பாதுகாப்பு சான்றை பெறவில்லை. அவா்கள் உள்ளூா் தீயணைப்புத் துறையிடமிருந்து முறையான சாதனங்களை வாங்கவில்லை. எனவே அவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனா்.

தலைமறைவாக உள்ள பொழுதுபோக்கு மையத்தின் மண்டல மேலாளரை தேடும் பணியில் குற்றப்பிரிவை சோ்ந்த 4 படைகள் களமிறங்கியுள்ளனா். இந்த வழக்கின் விசாரணை குற்றப்பிரிவு மற்றும் ராஜ்கோட் காவல்துறை இணை ஆணையா் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும். இச்சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள மாநில அரசு சாா்பில் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநா் தலைமையிலும் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.