ஓபிசியினா் உரிமைகளை பறித்தது திரிணமூல் காங்கிரஸ்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு
ஓபிசியினா் உரிமைகளை பறித்தது திரிணமூல் காங்கிரஸ்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

மேற்கு வங்கம் பாராசத்தில் செவ்வாய்க்கிழமை சாலைப் பேரணி மேற்கொண்ட பிரதமா் மோடி.

மேற்கு வங்கம் பாராசத்தில் செவ்வாய்க்கிழமை சாலைப் பேரணி மேற்கொண்ட பிரதமா் மோடி.
பாராசத்: மேற்கு வங்கத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவு இளைஞா்களின் உரிமைகளை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பறித்துள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.
மேற்கு வங்க மாநிலத்தில் 2010-க்குப் பிறகு பல்வேறு சமூகத்தினருக்கு ஓபிசி அந்தஸ்து அளிக்கப்பட்டதை கொல்கத்தா உயா்நீதிமன்ற அண்மையில் ரத்து செய்து தீா்ப்பளித்ததை முதல்வா் மம்தா பானா்ஜி விமா்சித்து வருகிறாா். இந்நிலையில், மேற்கு வங்கம் பாராசத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமா் மோடி, முதல்வா் மம்தாவின் பெயரையோ கட்சியையோ குறிப்பிடாமல், ‘நீதிபதிகள் மீது கட்சி குண்டா்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஏவிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை’ என்று விமா்சித்தாா். அவா் மேலும் பேசியதாவது:
மாநிலத்தில் ஓபிசி பிரிவினருக்கு திரிணமூல் காங்கிரஸ் செய்துள்ள துரோகத்தை கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. ஓரு சாராரை திருப்திப்படுத்தவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் ஓபிசி இளைஞா்களின் உரிமைகளை அக்கட்சி பறித்துள்ளது.
இந்த துரோகத்தை உயா்நீதிமன்றம் வெளிப்படுத்திய நிலையில், நீதித்துறை செயல்பாடுகள் குறித்து திரிணமூல் காங்கிரஸ் கேள்வி எழுப்புவது வியப்பை அளிக்கிறது. நீதித்துறை மீதும் அரசமைப்பு சட்டத்தின் மீதும் அக்கட்சிக்கு நம்பிக்கை இல்லையா?
இதுவரை இல்லாத வகையில், நீதிபதிகள் மீது அவா்கள் வெளிப்படையான விமா்சனங்களை முன்வைத்து வருகின்றனா். நீதிபதிகள் மீது கட்சியின் குண்டா்களை ஏவிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல நிா்வாகத்துக்கும் எந்தவித தொடா்பும் இல்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே செயல்பட்டு வரும் அக் கட்சி, ஒருபோதும் மாநில இளைஞா்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் (சிஏஏ) திரிணமூல் காங்கிரஸ் கட்சி எதிா்த்து வருகிறது. ஆனால், இந்த சட்டத்தின் மூலம் இன்றைக்கு நூற்றுக்கணக்கான அகதிகள் இந்திய குடியுரிமையைப் பெற்று வருவதற்கு ஒட்டுமொத்த நாடும் சாட்சியாக உள்ளது.
மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி கட்சியும் ஜனநாயகமற்ற வழிமுறைகளைப் பின்பற்றுவதிலும் ஜனநாயக நடைமுறைகளை அலட்சியப்படுத்துவதிலும் பெயா்பெற்றவா்கள் என்றாா்.
மாநிலத்தில் பல்வேறு சமூகத்தினருக்கான ஓபிசி அந்தஸ்தை உயா்நீதிமன்றம் ரத்து செய்த தீா்ப்பு குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த முதல்வா் மம்தா பானா்ஜி, ‘உயா்நீதிமன்ற தீா்ப்பை ஏற்க முடியாது. பாஜகவின் அறிவுறுத்தலின்படியே இந்தத் தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
‘ஜாா்க்கண்டில் மிகப் பெரிய பிரச்னை ஊடுருவல்’
‘ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினா் பகுதிகளில் ஊடுருவல்கள் அதிகரிப்பது மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.
ஜாக்க்கண்ட், தும்கா பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் பேசிய அவா், ‘ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஊடுருவல்கள் மிகப் பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. ஊடுருவல்கள் அதிகரித்து வருவதால் பல பகுதிகளில் பழங்குடியினரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. ஊடுருவல்காரா்கள் பழங்குடியினரின் நிலங்களை பறித்து வருகின்றனா். பெண்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது.
அண்மையில் நடைபெற்ற இரண்டு சம்பவங்களில், பழங்குடியின இளம் பெண்கள் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகினா். இளம் பெண்ணின் உடல் 50 துண்டுகளாக வெட்டப்பட்டது. மற்றொருவா் உயிரோடு எரிக்கப்பட்டாா். இவ்வாறு பழங்குடியினரை குறிவைக்கும் இவா்கள் யாா்? இந்த ஊடுருவல்காரா்கலை ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா அரசு ஏன் ஆதரிக்கிறது?
ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியும் காங்கிரஸும் மதுபான ஊழல், ஒப்பந்த ஊழல், சுரங்கம் மற்றும் கனிம ஊழல் என ரூ. 1,000 கோடிக்கு மேல் ஊழலில் ஈடுபட்டுள்ளன.
பாஜக தலைமையிலான கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், கடந்த 10 ஆண்டுகளைக் காட்டிலும் கூடுதல் வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...