
ஐக்கிய ஜனதா தள தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் விரைவில் அரசியலில் நுழையவிருக்கிறார். வரவே மாட்டார் எனக் கூறப்பட்டவர், நிதீஷின் அரசியல் வாரிசாக அறிமுகமாகப் போகிறார் என்கின்றன தகவல்கள்.
எப்போதுமே குடும்ப - வாரிசு அரசியலுக்கு எதிராகப் பேசிவந்தவர் நிதீஷ் குமார். தன் மகனை அரசியலுக்குள் அழைத்து வருவார் என இதுவரையிலும் யாரும் நம்பியதில்லை.
மகன் நிஷாந்த் குமார் அரசியலுக்கு வரக் காரணம் முதல்வர் நிதீஷ் குமாரின் உடல்நிலைதான் என்கின்றன தகவலறிந்த வட்டாரங்கள்.
நிதீஷ் உடல்நிலையைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். கட்சியின் பலம் மெல்லக் குறைந்து, சிறிது காலத்தில் சிதறிப் போய்விடலாம்; அவை காலப்போக்கில் வேறு கட்சிகளுடன் இணைக்கப்படலாம் என்பதுபோன்ற பேச்சுகளும் அடிபடத் தொடங்கிவிட்டன.
இத்தகைய பேச்சுகள் நிதீஷ் காதில் விழாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இத்தனை காலமும் கட்சியை உருவாக்கி் வளர்த்து வந்த நிதீஷ் குமார், எளிதில் கட்சியை விட்டுவிடுவாரா? கட்சியை மேற்கொண்டு தலைமை தாங்கி நடத்தவும், மாநிலத்தின் ஆட்சியதிகாரத்தில் கட்சி் தொடரவும் தேவையான நடவடிக்கைகளை நிதீஷ் தொடங்கிவிட்டார் என்றே கருதப்படுகிறது.
கட்சியைச் சீரமைக்கும் திட்டத்தில் இருக்கும் நிதீஷ் குமார், தனக்கு மிகவும் நெருக்கமான ஷ்ரவண் குமாரிடம், கட்சித் தலைமையை ஒப்படைக்கத் திட்டமிட்டிருக்கிறார். தற்போது இவர், பிகார் மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ளார். நிதீஷ் குமார் எடுக்கும் பெரும்பாலான அரசியல் முடிவுகளுக்குப் பின்னால், ஷ்ரவண் குமாரின் பங்களிப்பு இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்தியா கூட்டணியில் இணைந்திருந்த காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் இருந்த ஷ்ரவண் குமார், வாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடுவார் என்கிற அளவுக்குப் பேசப்பட்டது.
கட்சித் தலைமைப் பொறுப்பை ஷ்ரவண் குமார் ஏற்கும்போது, 49 வயதாகும் நிஷாந்த்தின் அரசியல் அறிமுகத்தையும் ஏற்படுத்திவிடலாம் என நிதீஷ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தந்தையைப் போலவே பொறியியல் பட்டதாரியான நிஷாந்த், தந்தையுடனே வசித்து வந்தாலும் அரசியலிலிருந்து தள்ளியே இருந்துவந்தவர்.
அண்மையில் நிதீஷ் மேற்கொண்ட சில பயணங்களின்போது நிஷாந்த் உடன் இருந்தார். தந்தை - மகன் அண்மையில் சொந்த மாவட்டமான நளந்தாவுக்குச் சென்றிருந்தனர். அங்கு கோயிலில் ஒன்றாக வழிபாடு செய்த பிறகு, சில சமூக மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளிலும் இணைந்தே கலந்துகொண்டனர்.
குடும்ப அரசியலுக்கு எதிராக நிதீஷ் குரல்கொடுத்து வந்த நிலையில், அரசியலில் தனது மகனைக் கொண்டு வருவது அவருக்கு எதிரான மிகப் பெரிய விமர்சனங்களையும் பெற்றுத் தரலாம். இதுபோன்ற விமர்சனங்களால், நிதீஷ் குமாருக்கு பல்டி ராமன் என்று பெயரையும் அரசியல் விமர்சகர்கள் சூட்டியிருக்கின்றனர்.
அண்மையில்கூட, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு யாதவ், தனது மகன்களை அரசியலுக்குக் கொண்டு வந்திருப்பது குறித்து நிதீஷ் விமரிசித்திருந்தார். தனக்குப் பிறகு மனைவியை முதல்வராக்கிவிட்டார், இருக்கும் ஒன்பது பிள்ளைகளையும் அரசியலுக்குக் கொண்டு வருகிறார், இவர்கள் மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, அனைத்திலும் நமது குடும்பத்தையே கொண்டுவந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று நிதீஷ் குமார் பேசியிருந்தார்.
இந்த நிலையில்தான், நிதீஷ் குமார் தனது மகன் நிஷாந்த் குமாரை அரசியலில் களமிறக்கி, அடுத்த அரசியல் வாரிசை உருவாக்கவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.