
பிரதமர் நரேந்திர மோடி "கடவுளால் அனுப்பப்பட்டவர்" என்ற கருத்துக்கு எதிராக பேசியுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், "பாஜகவுக்கு எதிராக பொதுமக்களிடம் கோபம் அதிகமாகவே உள்ளது.
விலைவாசி உயர்வு, வேலையின்மையால் மக்கள் சோர்ந்து போயுள்ளனர். மக்கள் அன்றாட வாழ்க்கையை வாழமுடியவில்லை. வேலையின்றி தவிக்கின்றனர். அவர்களின் பிரச்னைகளை பிரதமர் தீர்த்து வைப்பார் என்று நம்புகிறார்கள். ஆனால், பிரதமரின் உரையைக் கேட்கும்போது, அவர் தங்களுக்கு எதையும் செய்யவில்லை என்பதைக் காண்கிறார்கள்.
நீங்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தால், உங்களின் இரண்டு எருமைகளில் ஒன்றை எடுத்துச் செல்வோம். உங்கள் தாலியை பறிப்போம் என்று பிரதமர் கூறுகிறார்.
பிரதமர் மகாராஷ்டிரத்தில் பேசும் போது, சரத் பவாரையும், உத்தவ் தாக்கரேவையும் தரம் தாழ்த்தி பேசியுள்ளார்.மக்கள் இதுபோன்று பேசுவதை எதிர்பார்க்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதை பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கிறார்கள்.
பிரதமர் மோடியை 'கடவுளாக' ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இருக்கிறார்களா?. பிரதமர் மோடியை கடவுளாக நம்புவதா வேண்டாமா என்பதை ஆர்எஸ்எஸ் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
இப்போதெல்லாம், பிரதமர் மோடி முற்றிலும் வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய கடைசி 10-12 பேட்டிகளைப் பார்த்தால், நான் ஒரு சாதாரண மனிதன் அல்ல, நான் 'கடவுளின் அவதாரம்' என்று வெளிப்படையாகக் கூறுகிறார்.
மக்களும் பிரதமர் மோடியை கடவுள் என்று நம்புகிறார்களா? நாங்கள் ராமர், கிருஷ்ணர், சிவனை கடவுளாக நம்புகிறோம். மோடியை எப்படி கடவுளாக ஏற்றுக்கொள்வது?
அவரை பின்பற்றுபவர்கள்கூட அதையே தான் சொல்கிறார்கள். பகவான் ஜெகந்நாதர் பிரதமர் மோடியின் பக்தர் என்று சம்பித் பத்ரா கூறினார். பிரதமர் மோடியை 'கடவுள்களின் கடவுள்' என ஜே.பி.நட்டா கூறுகிறார்.
அவர்கள் எல்லோரும் எந்த உலகில் வாழ்கிறார்கள். மக்கள் துயரத்தில் உள்ளனர். ஆனால், இவர்கள் தங்களை கடவுளின் அவதாரமாக என்று மார்தட்டிக்கொள்கின்றனர்.
பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் என்று நம்புகிறதா? என்பது குறித்து ஆர்.எஸ்.எஸ். தான் இங்கே ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்'' என்றார் அரவிந்த் கேஜரிவால்.
முன்னதாக, ஒடிஸாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, பூமிக்கு தன்னை கடவுள் அனுப்பியதாகவும், தான் உயிரியல் ரீதியாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்புவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.