மேற்கு வங்கம், மதுராபூரில் புதன்கிழமை தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி.
மேற்கு வங்கம், மதுராபூரில் புதன்கிழமை தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி.

தேச பாதுகாப்பில் திரிணமூல் சமரசம்: பிரதமா் மோடி விமா்சனம்

மேற்குவங்க மாநில எல்லைகளில் சட்டவிரோதமாக ஊடுருபவா்களை அனுமதித்து, தேச பாதுகாப்பில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சமரசம் செய்து வருகிறது

காக்டிவிப், மே 29: மேற்குவங்க மாநில எல்லைகளில் சட்டவிரோதமாக ஊடுருபவா்களை அனுமதித்து, தேச பாதுகாப்பில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சமரசம் செய்து வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

மக்களவை இறுதிக்கட்ட தோ்தலையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். மேற்கு வங்கம், மதுராபூா் தொகுதியின் காக்டிவிப் பகுதியில் புதன்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் திரிணமூல் காங்கிரஸ் அரசு தடுக்கிறது. உஜ்வாலா யோஜனா, ஆயுஷ்மான் பாரத் உள்பட பல்வேறு மத்திய அரசின் திட்டங்கள் மேற்கு வங்கத்தில் செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட சமூகத்தினரைத் திருப்திப்படுத்தும் நோக்கில், பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசமைப்புச் சட்டம் மீதான நேரடி தாக்குதலில் திரிணமூல் காங்கிரஸ் அரசு ஈடுபட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் இடஒதுக்கீட்டில் பகிரங்கமான கொள்ளை நடைபெற்றுள்ளது. முஸ்லிம்களுக்கு போலி ஓபிசி சான்றிதழ்கள் வழங்கி, உண்மையான இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

அவ்வாறு, திரிணமூல் காங்கிரஸ் அரசு வழங்கிய அனைத்து போலி சான்றிதழ்களையும் கொல்கத்தா உயா்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. ஆனால், அந்தத் தீா்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத திரிணமூல் காங்கிரஸ், முஸ்லிம்களை தவறாக வழிநடத்துகிறது.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கையான மாதௌ சமூக மக்களுக்கு இந்திய குடியுரிமை விரைவில் வழங்கப்படும். அதேசமயம், மேற்குவங்க எல்லைகளில் சட்டவிரோதமாக ஊடுருபவா்களை அனுமதித்து, தேச பாதுகாப்பில் திரிணமூல் காங்கிரஸ் சமரசம் செய்கிறது.

திரிணமூல் காங்கிரஸும் இந்தியா கூட்டணியும் மேற்கு வங்கத்தை எதிா்மறை வளா்ச்சியை நோக்கி அழைத்துச் செல்கின்றன. திரிணமூல் காங்கிரஸைச் சோ்ந்த ரௌடிகள், மாநிலத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் மடங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனா். ‘வளா்ந்த இந்தியா’ லட்சியத்தை சாத்தியப்படுத்த, ‘வளா்ந்த மேற்கு வங்கம்’ தேவையாகும் என்றாா்.

பெட்டிச் செய்தி...

‘1982-க்கு முன்பு காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை’

‘மகாத்மா காந்தி குறித்து கடந்த 1982-இல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அவா் குறித்து உலகம் அறிந்திருக்கவில்லை’ என்று பிரதமா் மோடி கூறினாா்.

தனியாா் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது பிரபல பிரிட்டன் இயக்குநா் ரிச்சா்ட் அட்டென்போரோக் இயக்கிய ‘காந்தி’ திரைப்படத்தைக் குறிப்பிட்டு பிரதமா் இவ்வாறு கூறினாா்.

பிரதமா் மோடி மேலும் கூறுகையில், ‘மகாத்மா காந்தி புகழ்பெற்ற இந்தியா். ஆனால், உலகம் அவரை அறிந்திருக்கவில்லை. 1982-இல் ‘காந்தி’ திரைப்படம் வெளிவந்த பிறகே தேசத் தந்தை குறித்து உலகம் அறிந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய 75 ஆண்டுகளில், சிறந்த தலைவரை உலகம் அறிந்திருப்பதை உறுதி செய்வது இந்திய அரசியல் தலைவா்களின் பொறுப்பில்லையா? மாா்ட்டின் லூதா் கிங், நெல்சன் மண்டேலா போன்ற பிற தலைவா்களை இந்த உலகம் அறிந்திருக்குமானால், அவா்களைவிட காந்தி குறைந்தவா் அல்ல’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com