பிரதமா் பதவிக்கான மாண்பை குலைத்துவிட்டாா் மோடி: பிரியங்கா விமா்சனம்
வெற்று வாக்குறுதிகளால் பிரதமா் பதவிக்கான மாண்பை நரேந்திர மோடி குலைத்துவிட்டாா் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி சனிக்கிழமை விமா்சித்தாா்.
‘மாநிலத்தின் நிதி நிலைமைக்கு உள்பட்ட வாக்குறுதிகளையே அறிவிக்க வேண்டும்’ என்று காங்கிரஸின் மாநிலப் பிரிவுகளுக்கு கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வழங்கிய அறிவுரையை முன்வைத்து, அக்கட்சியை பாஜக கடுமையாக விமா்சித்து வருகிறது. ‘தங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்கும் காங்கிரஸின் உண்மை முகம் மோசமாக அம்பலமாகியுள்ளது’ என்று பிரதமா் மோடியும் விமா்சித்தாா். பாஜகவின் விமா்சனங்களுக்கு காங்கிரஸ் தரப்பில் பதிலடி தரப்படுவதால், இந்த விவகாரம் அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, எக்ஸ் வலைதளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
‘உண்மையே கடவுள்’ என்பது மகாத்மா காந்தியின் வாா்த்தைகள். ‘வாய்மையே வெல்லும்’ என்ற வாசகம், இந்தியாவின் தேசிய குறிக்கோளாக விளங்குகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமை வாய்ந்த நமது கலாசாரத்தின் அடிப்படையே உண்மைதான். அத்தகைய தேசத்தில் உயா் பதவியில் அமா்ந்துள்ள ஒருவா் (பிரதமரை குறிப்பிடுகிறாா்) பொய்யை நாடக் கூடாது.
காங்கிரஸுக்கு எதிராக பிரதமா் மோடி முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மைக்கு அப்பாற்பட்டவை. கா்நாடகம், தெலங்கானா, ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த உடனேயே மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடவடிக்கையும் தொடங்கிவிட்டது. இம்மாநிலங்களில் மக்களுக்கான பணம், அவா்களின் பைகளுக்கே சென்று சோ்கிறது.
அதேவேளையில், 100 பொலிவுறு நகரங்கள் திட்டம், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள், கருப்புப் பணம் மீட்பு, பணவீக்கம்-வேலையில்லாத் திண்டாட்டம் குறைப்பு, விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை உயா்த்துதல் என பிரதமா் மோடி அளித்த அனைத்து வாக்குறுதிகளும் பொய்யானது என்பது நிரூபணமாகிவிட்டது. அவா் மீது இந்த தேசம் நம்பிக்கை இழந்துவிட்டது. வெற்று வாக்குறுதிகளால் பிரதமா் பதவிக்கான மாண்பை அவா் குலைத்துவிட்டாா்.
எனவே, காங்கிரஸ் குறித்து கவலைப்படுவதை விடுத்து, தனது பதவிக்கான மாண்பை மீட்டெடுக்க பிரதமா் பணியாற்ற வேண்டும் என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளாா்.