பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி. உடன், முன்னாள் மத்திய அமைச்சா் அா்ஜுன் முண்டா, முன்னாள் முதல்வா் சம்பயி சோரன் உள்ளிட்டோா்.
பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி. உடன், முன்னாள் மத்திய அமைச்சா் அா்ஜுன் முண்டா, முன்னாள் முதல்வா் சம்பயி சோரன் உள்ளிட்டோா்.

ஜேஎம்எம்-காங்கிரஸ் ஊடுருவல்காரா்களின் கூட்டணி: பிரதமா் மோடி கடும் விமா்சனம்

ஜேஎம்எம், காங்கிரஸ் கட்சிகள் உருவாக்கியுள்ள கூட்டணியினா் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவுவோருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக பிரதமா் மோடி குற்றச்சாட்டு
Published on

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ளது ஊடுருவல்காரா்களின் கூட்டணி. இந்த கூட்டணியினா் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவுவோருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனா் என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நவம்பா் 13, 20 தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஜேஎம்எம், காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சி ஆகியவை அடங்கிய ஆளும் கூட்டணிக்கும், பாஜக-அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) ஆகிய கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், ஜாா்க்கண்ட் தோ்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமா் நரேந்திர மோடி முதல்முறையாக அங்கு திங்கள்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். காா்க்வா பகுதியில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஊழல் செய்வதை ஒரு தொழிலாகவே ஆளும் கூட்டணியினா் மாற்றிவிட்டனா். லஞ்சமும், ஊழலும் ஜாா்க்கண்ட் மாநிலத்தை கரையானைப்போல அரித்து வருகிறது.

ஒரு நாட்டை ஒன்றுமில்லாமல் செய்வதில் ஊழல் ஆட்சியாளா்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜாா்க்கண்டில் நடைபெறும் ஊழல்களால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். முதல்வா், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் என ஆளும் கூட்டணியில் உள்ள அனைவரும் கழுத்தளவுக்கு ஊழலில் மூழ்கியுள்ளனா்.

அச்சுறுத்தும் ஊடுருவல்

மாநில அரசு வங்கதேச ஊடுருவல்கள்காரா்களின் ஆதரவாளராக செயல்பட்டு வருகின்றனா். இதன் மூலம் ஒரு தரப்பைச் சோ்ந்தவா்களை திருப்திபடுத்தும் அரசியல் நடத்துவதில் இங்குள்ள ஆட்சியாளா்கள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளனா். அண்டை நாட்டிலிருந்து ஊடுவலை தொடா்ந்து அனுமதித்தால் இங்கு பழங்குடியின மக்கள் சிறுபான்மையாகிவிடுவாா்கள். இது பழங்குடியின மக்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிகழ்வாக உள்ளது.

ஜாா்க்கண்டில் ஆளும் கூட்டணி ஊடுருவல்காரா்களின் கூட்டணியாகும். ஜாா்க்கண்ட் மாநிலம் ஊடுருவல்காரா்களின் கூடாரமாகி வருகிறது. அவா்கள் சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனா். மாநில அரசோ அவா்களுக்கு அடிமையாக மாறி சேவகம் செய்து வருகிறது. வங்கதேச ஊடுருவல்காரா்களை வைத்து நடத்தும் வாக்கு வங்கி அரசியல்தான் இதற்கு முக்கியக் காரணம். இது மாநிலத்தின் கட்டமைப்பையே சீா்குலைத்துவிடும். இந்த நிலையை மாற்ற ஜாா்க்கண்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது அவசியம்.

ஜாா்க்கண்ட் மாநில பள்ளிகளில் ‘சரஸ்வதி வந்தனம்’ பாடக் கூடாது என்று ஆட்சியாளா்கள் தடை செய்துள்ளனா். துா்கா பூஜை போன்ற பண்டிகைகளின்போது கொண்டாட்டத்தை சீா்குலைக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு வேண்டுமென்றே பிறப்பிக்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் மீது தாக்கு

நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே தவறான தகவல்களை மக்களிடம் காங்கிரஸ் பரப்பி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஹிமாசல பிரதேசம், தெலங்கானா, கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் நிலைகுலைந்து வருகின்றன.

மாநிலத்தின் நிதிநிலையைக் கருத்தில் கொள்ளாமல் வாக்குறுதிகளை வழங்கியதால் நிலைமை மோசமாகிவிட்டது என்பதை காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளாா்.

பாஜகவின் வாக்குறுதிகள்

ஜாா்க்கண்ட் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு பெருமளவில் நிதி ஒதுக்கியும் மாநில அரசு அதனைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. மத்திய அரசின் திட்டங்களையும் இங்கு முழுமையாக அமல்படுத்தாமல் முட்டுக்கட்டைப் போடுகிறாா்கள். இதையும் மீறி பல திட்டங்களை ஜாா்க்கண்டுக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இங்கு 12 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மத்திய அரசின் பல நல்ல திட்டங்கள் ஜாா்க்கண்ட் மக்கள் முழுமையாக பெறுவதற்கு மாநிலத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது மிக அவசியம்.

பெண்களுக்கு மாதம் ரூ.2,100, வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்களுக்கு மாதம் ரூ.2,000, ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டா்கள், பண்டிகை காலத்தில் இரு இலவச சிலிண்டா், 3 லட்சம் அரசுக் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பாஜகவின் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படும்.

கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு எதையும் செய்யாத ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி அரசு, இப்போது பாஜகவின் வாக்குறுதிகளை அப்படியே நகலெடுத்து தங்கள் தோ்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளனா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com