
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சிபிஐ, சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விசாரணைக் குழுவில் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். தேசிய அமைப்பிலிருந்து இருவர், ஆந்திர மாநில அதிகாரிகள் இருவர் மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திலிருந்து ஒருவர் என 5 பேர் இக்குழுவில் உள்ளனர்.
இது தொடர்பாக பேசிய ஆந்திர மாநில காவல் துறை தலைமை இயக்குநர் துவாரகா திருமலா ராவ் கூறியதாவது,
''ஆந்திர மாநில காவல் துறையிலிருந்து ஐபிஎஸ் அதிகாரிகளான சர்வஸ்ரேத் திரிபாதி, கோபிநாத் ஆகியோர் சிபிஐ சிறப்பு விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவரின் பெயர்களை சிபிஐக்கு அனுப்ப மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை சிபிஐ இயக்குநர் அமைப்பார்'' எனக் கூறினார்.
பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி ஆகியோர், திருப்பதி லட்டு விவகாரத்தை சிறப்புக் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அக். 4ஆம் தேதி நடைபெற்ற இந்த மனுக்களின் மீதான விசாரணையின்போது, சிறப்புக் குழு அமைக்க சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.