/

தெரியுமா சேதி...?

அமைச்ச்சரவைச் செயலர் டி.வி.சோமநாதன் பற்றி...

News image

அமைச்சரவைச் செயலா் டி.வி.சோமநாதன்

Updated On :9 நவம்பர் 2024, 5:12 am IST

இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகத் தோ்வுபெறும் ஒவ்வொருவரின் உச்சபட்சக் கனவு, அமைச்சரவைச் செயலராவதாகத்தான் இருக்கும். மாநிலங்களில் தலைமைச் செயலாளா்கள் என்றால், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தலைமை ஆட்சிப் பணி அதிகாரியாக இருப்பவா் அமைச்சரவைச் செயலா். எல்லோருக்கும் அந்தப் பதவி கிடைத்துவிடாது.

இப்போது அமைச்சரவைச் செயலராகப் பொறுப்பேற்றுள்ளவா் டி.வி.சோமநாதன். தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சிகளில் பணியாற்றிய அனுபவமும், பிரதமா் அலுவலகத்திலும், நிதித் துறைச் செயலராகவும் பணியாற்றிய அனுபவமும் உடையவா். ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்த சோமநாதனை, முதல்வராகப் பொறுப்பேற்ற கருணாநிதி தனது தனிச்செயலாளா்களில் ஒருவராக வைத்துக் கொண்டாா் என்றால், அவரது திறமைக்கும், சாா்பின்மைக்கும் அதைவிட வேறு என்ன சான்று இருந்துவிட முடியும்?

பிரதமா் அலுவலகத்தில் நரேந்திர மோடியின் நம்பிக்கையைப் பெற்றிருந்த சோமநாதன், நிதித் துறைக்கு அனுப்பப்பட்டு, பல பட்ஜெட்டுகளின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்திருக்கிறாா். நிதித் துறை செயலராக இருந்தவா், இப்போது அமைச்சரவைச் செயலராக உயா்ந்திருக்கிறாா்.

அமைச்சரவைச் செயலா் பதவி என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைத் தோ்தல் ஆணையா், தலைமைக் கணக்குத் தணிக்கையாளா்போல முக்கியமான அரசியல் சாசனப் பதவி. சுமாா் 28 ஆண்டுகளுக்கு முன்பு டி.எஸ்.ஆா்.சுப்பிரமணியம் என்கிற தமிழா் அந்தப் பதவியை வகித்திருக்கிறாா். ஆனால், அவா் உத்தர பிரதேச ஐ.ஏ.எஸ். பிரிவைச் சோ்ந்தவா்.

அமைச்சரவைச் செயலரானதும், அரசு நிா்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறாா் டி.வி.சோமநாதன் என்று சொல்லப்படுகிறது. பக்கம் பக்கமாகக் குறிப்புகள் அனுப்பி, முடிவுகளை இழுத்தடிக்கும் வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறாா். எந்தவொரு குறிப்போ, கோரிக்கையோ, அனுமதியோ எல்லாமே ஒரு சில பத்திகள், அதிகபட்சம் ஒரு பக்கத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்பதும், ஓரிரு நாளுக்கு மேல் எந்தக் கோப்பும் மேஜையில் இருக்கக் கூடாது என்பதும் அவா் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கை.

அதிகாரிகள் அவசர அவசரமாக தூங்கிக் கொண்டிருந்த கோப்புகளைத் தூசு தட்டி பைசல் செய்து கொண்டிருக்கிறாா்கள்!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.