காருக்கு நடந்த நல்லடக்கம்: 2 ஆயிரம் பேருக்கு 4 பக்க அழைப்பிதழ்!

காருக்கு நடந்த நல்லடக்கத்தில் 1,500 பேர் பங்கேற்பு. ஒரு குடும்பத்தின் அதீத நம்பிக்கை!
காருக்கு நல்லடக்கம்
காருக்கு நல்லடக்கம்
Published on
Updated on
1 min read

ரூ.4 லட்சம் செலவில் காருக்கு நடந்த நல்லடக்கம்.. 1,500 பேர் பங்கேற்பு! ஒரு குடும்பத்தின் நம்பிக்கை!!

ரூ.4 லட்சம் செலவில், ஒரு காருக்கு நடத்தப்பட்ட நல்லடக்க நிகழ்ச்சியில் சுமார் 1500 பேர் பங்கேற்றது குஜராத்தில் இன்று பேசுபொருளாகியிருக்கிறது.

குஜராத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், தாங்கள் பயன்படுத்தி வந்த கார் இனி ஓடாது என்று தெரிந்ததும், அதனை பழைய இரும்புச் சாமானுக்குப் போட்டு பேரீச்சம்பழம் வாங்கிவிடாமல், தங்கள் குடும்ப உறவுகளில் ஒருவரைப் போல அதற்கு வெகுச் சிறப்பாக நல்லடக்கம் செய்திருக்கிறார்கள்.

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காரின் உரிமையாளர் சஞ்சய் பொலாரா, இந்தக் காரை வாங்கிய பிறகுதான் தங்களது குடும்பத்துக்கு அதிர்ஷ்டம் வந்ததாகவும் சமூகத்தில் மதிப்பு மிக்க குடும்பமாக உருவானதாகவும் உருக்கமாகக் கூறுகிறார்.

நான் இந்த காரை 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினேன். எனது தொழிலில் நல்ல வளர்ச்சி, அதனைத் தொடர்ந்து குடும்பத்திலும் வளர்ச்சி ஏற்பட்டது. எனக்கும் என் குடும்பத்துக்கும் இந்த கார் ஒரு அதிர்ஷ்டமாக இருந்தது. எனவே, அதனை விற்றுவிடுவதற்கு பதில், அதனை நல்லடக்கம் செய்து சமாதி ஏற்படுத்தி மரியாதை செலுத்த வேண்டும் என்று நினைத்தேன் என்கிறார் பொலாரா.

மிகவும் அதிர்ஷ்டமாக அந்தக் காரை பழைய இரும்புச் சாமான் கடையில் போட்டுவிட மனம் வராமல் என்ன செய்வதென்று யோசித்த போதுதான் அவர்களுக்கு இந்த எண்ணம் உருவாகியிருக்கிறது.

ஆனால், அந்த எண்ணம் இன்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

ஒரு காருக்கு நடந்த நல்லடக்கம் விழாவில், சுமார் 1500 பேர் பங்கேற்றுள்ளனர். 12 ஆண்டுகள் ஓடாய் உழைத்த வேகன் ஆர் காருக்கு நடத்தப்பட்ட நல்லடக்கக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.

காருக்கு ஏற்ற வகையில் பள்ளம் தோண்டப்பட்டு, அந்தக் கார், பள்ளத்துக்குள் இறங்குவதற்கான தாழ்வாக தளம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

வாகன் ஆர் காருக்கு நடந்த நல்லடக்கம் நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த கார் புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு மரம் நட்டு, தங்களது அதிர்ஷ்டமான கார் இங்கே துயில் கொண்டிருப்பதை, எங்களது எதிர்கால சந்ததிக்கும் தெரிவுபடுத்த விரும்புவதாகக் கூறியிருக்கிறார்கள்.

எங்கள் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்காமல், பலரும் இதில் பங்கேற்க விரும்பினோம். அதற்காக நான்கு பக்கங்களைக் கொண்ட அழைப்பிதழை அச்சடித்து கிராமத்தில் உள்ள 2,000 பேருக்கு அனுப்பினோம். அந்த அழைப்பிதழில், இந்தக் கார் எங்கள் குடும்பத்தில் 2006ஆம் ஆண்டு முதல் குடும்ப உறுப்பினராகவே இருந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொடுத்தது. இந்த சமுதாயத்தில் எங்கள் குடும்பத்தின் மீதான மரியாதையும் உயர்ந்தது. எனவே இந்தக் கார் எங்கள் நினைவாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம், எனவே, அதனை நல்லடக்கம் செய்து சமாதி ஏற்படுத்த விரும்புகிறோம் என்று கூறப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com