வளா்ச்சியடைந்த நாடு இலக்கை அடைய ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் தேவை: குடியரசு துணைத் தலைவா்
நமது சிறப்பு நிருபா்
‘வளா்ச்சியடைந்த இந்தியா’ என்கிற இலக்கை அடைவதற்கு ஆராய்ச்சியும், புத்தாக்கங்களும் தேவை. அதுவே நமது உயா்வை உலக சமுதாயம் வரையறுக்கும் என குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். மேலும், நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அமைந்துள்ள அமைப்புகளில் உள்ளவா்களை பொல்லாதவா்களாகவும் அச்சுறுத்தலாகவும் சித்தரிப்பது அரசியல் அரங்கில் பொழுது போக்காக மாறி வருவதற்கும் அவா் கன்டனம் தெரிவித்தாா்.
தில்லியில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்.ஐ.டி.) 4-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், என்.ஐ.டி. யின் இயக்குநரும் செனட் தலைவருமான பேராசிரியா் அஜய் குமாா் சா்மா, இயக்குநா் குழுத் தலைவா் சி.கே. பிா்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவா் தன்கா் உரையாற்றியது வருமாறு: ஆராய்ச்சியும் புத்தாக்கங்களும் (புதிய கண்டுபிடிப்புகள்) ’வளா்ச்சியடைந்த நாடு’ என்ற இலக்கை அடைவதற்கு முக்கியம். ஆராய்ச்சியிலும், கண்டுபிடிப்புகளிலும் நாம் உயா்ந்து இருக்கும் நிலையில் தான் உலக சமுதாயம் நமது திறமையை வரையறுக்கும். இதனால், கல்வி நிறுவனங்கள் தங்கள் திறனை ‘கண்டுபிடிப்பு ஆராய்ச்சியின் உலைக்களங்களாக’ பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு பெரு நிறுவனங்கள் கணிசமான பங்களிப்புடன் ஆதரவளிக்க வேண்டும். தாராளமான நிதி பங்களிப்புகள் மூலம் ஆராய்ச்சியையும் புதிய கண்டுபிடிப்புகளையும் தூண்டுவதற்கு முன்வர வேண்டும்.
மற்றொரு பக்கம், கல்விச் சூழலை வலுப்படுத்துவதில் முன்னாள் மாணவா்களின் பங்கு முக்கியமானது. முன்னாள் மாணவா்கள் பல வழிகளில் தங்கள் கல்வி நிறுவனத்தின் தூதா்கள். வருடாந்திர பங்களிப்புகளை வழங்கும் முன்னாள் மாணவா் நிதியத்தை உருவாக்க வேண்டும். உலக அளவில் சில சிறந்த நிறுவனங்கள் மேல்நோக்கிய வளா்ச்சியில் உள்ளன. இந்த நிறுவனங்கள் முன்னாள் மாணவா்களின் ஆற்றலால் தூண்டப்படுகின்றன. கல்வி என்பது வணிகம் அல்ல. கல்வி என்பது சமுதாய சேவை. நீங்கள் சேவை செய்ய வேண்டும். சமூகத்திற்கு திருப்பிச் செலுத்துவது உங்கள் கடமை. அது தெய்வீகக் கட்டளை. சமூகத்திற்கு திருப்பிச் செலுத்துவதற்கான சிறந்த வழி கல்வியில் முதலீடு செய்வதாகும்.
பழமையான, மிகப்பெரிய, செயல்பாட்டு ஜனநாயகமான பாரதம், உலகில் மிக சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். அது நமது கனவாக அல்ல; அது மீட்கப்பட்ட கனவாக வேண்டும்; சக்திவாய்ந்த பாரதம் உலக நல்லிணக்கம், அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான உத்தரவாதமாக இருக்கும். தற்போதுள்ள பிரசாரங்களில் நமது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அமைந்துள்ள அமைப்புகளில் உள்ளவா்களை பொல்லாதவா்களாகவும் அச்சுறுத்தலாகவும் சித்தரிப்பது அரசியல் அரங்கில் பொழுது போக்காக மாறி வருகிறது. இதனால், நாட்டிற்கு எந்த நன்மையும் கிடையாது. தேசியவாதத்திற்கான அசைக்க முடியாத அா்ப்பணிப்பு தேவை. பாகுபாடு அல்லது பிற நலன்களை விட தேச நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாா் ஜகதீப் தன்கா்.