
நாக்பூர்: பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் திங்கள்கிழமை(நவ. 11) ஈடுபட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எதிர்க்கட்சியான காங்கிரஸை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மகாராஷ்டிரத்தில் நவ. 20-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. 288 தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில் காங்கிரஸ்-சிவசேனை (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இடம்பெற்ற ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணிக்கும், பாஜக-முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் ‘மகாயுதி’ கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் திங்கள்கிழமை நிதின் கட்கரி பேசியதாவது, “நாங்கள்(பாஜக) பாபாசாஹேப் அம்பேத்கரின் அரசமைப்பை மாற்றமாட்டோம், அதில் மாற்றம் செய்ய யாரையும் அனுமதிக்கவும் மாட்டோம்”.
“அரசமைப்பின் அடித்தளத்தை மாற்ற முடியாது. அரசமைப்பின் முக்கிய அம்சங்களான பேச்சுரிமை, ஜனநாயகம், சமூகவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை எவராலும் மாற்ற முடியாது.
அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காலத்தில், இந்திரா காந்தி அரசமைப்பை சிதைத்தார். நாட்டின் வரலாற்றில், அரசமைப்பை சிதைக்கும் பாவச்செயலை காங்கிரஸ்தான் செய்தது, இந்த நிலையில் இப்போது அவர்கள் நம் மீது குற்றஞ்சுமத்துகின்றனர்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.