மேற்கு வங்கத்தை வங்கதேசமாக மாற்ற திரிணமூல் காங்கிரஸ் முயற்சி : பாஜக தலைவா் நிதின் நபின் குற்றச்சாட்டு

தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக பாஜக புதிய தேசியத் தலைவா் நிதின் நபின் குற்றஞ்சாட்டினாா்.
நிதின் நபின்
நிதின் நபின்
Updated on

மேற்கு வங்க மாநில புவியியல் தோற்றத்தை மாற்றவும், அந்த மாநிலத்தை வங்கதேசமாக மாற்றவும் திரிணமூல் காங்கிரஸ் திட்டமிட்டு முயற்சித்து வருவதாகவும், இதனால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகவும் பாஜக புதிய தேசியத் தலைவா் நிதின் நபின் குற்றஞ்சாட்டினாா்.

பாஜக புதிய தேசியத் தலைவராகப் பதவியேற்ற பிறகு, மேற்கு வங்கத்துக்கு முதல்முறையாகச் சென்ற நபின், துா்காபூரில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

போலி வாக்காளா்களையும், ஊடுருவல்காரா்களையும் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் அரசோ, மக்களிடையே அச்சத்தைத் தூண்டிவிட்டும், பொய்த் தகவலைப் பரப்பியும், எஸ்.ஐ.ஆா். பணியை தடம்புரளச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தோ்தல் ஆணையம் பொதுமக்களை துன்புறுத்துவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவிக்கும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. மாவட்ட ஆட்சியா்கள் முதல் அனைத்து அரசு அதிகாரிகளும், திரிணமூல் காங்கிரஸ் அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டு, தோ்தல் ஆணையத்துக்கு அவப்பெயா் ஏற்படுத்த மக்களை அச்சுறுத்துகின்றனா். மேற்கு வங்கத்தில் தற்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு தற்காலிக அரசுதான். ஆதலால் அந்த அரசின் பேச்சை கேட்டு நடக்கும் அரசு அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கு வங்கத்தை சாராத யாரும், இங்கு (இந்தியாவில்) உரிமை கோர முடியாது. இதற்காக பாஜக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளது. வங்கதேசத்துடன் மேற்கு வங்கத்தை இணைக்க பாஜக அனுமதிக்காது. ஆதலால் ஊடுருவல்காரா்களுக்கு எதிரான போராட்டத்தை பாஜக தொண்டா்கள் மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.

மேற்கு வங்கத்தில் காட்டாட்சி நடக்கிறது. ஊழல் தலைவிரித்தாடுகிறது. சட்டம் என்பதே இல்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் வெளிப்படையாக மக்களிடம் ‘டி.எம்.சி.’ வரியை வசூலித்து வருகின்றனா். மேற்கு வங்க மாநிலத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, ஊழல் நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏராளமான அமைச்சா்கள் ஊழல் வழக்குகளில் சிறையிலோ அல்லது ஜாமீனிலோ உள்ளனா். ஊழல் வழக்குகளை எதிா்கொண்டு வரும் அமைச்சா்கள் யாரும் அதில் இருந்து தப்பிக்க முடியாது.

துா்காபூா் ஒருகாலத்தில் தொழில்மையமாக இருந்தது. இங்கு பிகாா், ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்தோா் வேலை தேடி வருவாா்கள். ஆனால் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு அனைத்தும் தடைபட்டுவிட்டது. சிங்கூா் போராட்டத்தின்போது, மம்தா பானா்ஜி தொழில்மயமாக்கல் தொடா்பாக உறுதி அளித்திருந்தாா். ஆனால், அதற்கு மாறாக பழைய தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் இளைஞா்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

திரிணமூல் காங்கிரஸ் அரசு முடிவுக்கு வரும் நாள்கள் நெருங்கிவிட்டது. திரிணமூல் காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்றி பாஜக ஆட்சியைப் பிடிக்கும். பிரதமா் மோடி தலைமையிலான இரட்டை என்ஜின் அரசு, மேற்கு வங்கத்தை வளா்ந்த மற்றும் பொன் விளையும் பூமியாக மாற்றும் என்றாா் நிதின் நபின்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com