
மணிப்பூரில் வன்முறை காரணமாக பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு போலீஸார் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிரிபாம் மாவட்டத்தில் ஆயுதக் கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் சிஆர்பிஎஃப் முகாம் மற்றும் காவல்நிலையம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, ஜாகுரதார் கரோங் மார்க்கெட் பகுதியச் சுற்றியுள்ள பல கடைகள், வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து 11 பேர் பாதுகாப்புப் படையினரால் நேற்று (நவ. 12) சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 11 பேரும் குகி இனத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் அதிகாரிகள் காயமடைந்தனர். அதில் ஒருவரின் நிலை மிக மோசமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
11 பேர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக குகி-சோ இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலைப்பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இம்பால் பள்ளத்தாக்கில் பல இடங்களில் புதிய வன்முறை சம்பவங்கள் பல நிகழ்த்தப்படுவதாகவும், ஆயுதம் ஏந்திய குழுக்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தொடர் தாக்குதல்களில் ஜாகுரதார் கரோங் மார்க்கெட் பகுதியச் சுற்றியுள்ள பல கடைகள், வீடுகள், காவல்நிலையம் மற்றும் சிஆர்பிஎஃப் முகாம் உள்பட பல இடங்களில் ஆயுதக் கிளர்ச்சியாளர்கள் தீ வைத்துள்ளனர். இதன் காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 11 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு 45 நிமிடங்கள் வரை தொடர்ந்ததாகவும், இதையடுத்து அந்தப் பகுதி முழுக்க கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கிளர்ச்சியாளர்களை விரட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்துந டைபெற்று வருவதாகவும், அஸ்ஸாம் ரைபிள்ஸ், சிஆர்பிஎஃப் மற்றும் போலீசார் அடங்கிய படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இம்பால் உள்பட பல்வேறு இடங்களில் மோதல்கள் நடப்பதாகவும், போலீஸார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.