
சரத் பவாரின் புகைப்படங்கள், விடியோக்களை பயன்படுத்தாமல், உங்களின் சொந்தக் காலில் நில்லுங்கள் என்று அஜித் பவார் அணிக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை அறிவுரை வழங்கியுள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற 20ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இறுதி கட்டப் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்த தேர்தலில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பாஜக கூட்டணியிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) காங்கிரஸ் கூட்டணியிலும் போட்டியிடுகின்றன.
சரத் பவாா் தலைமையிலான கட்சியை அஜீத் பவாா் உடைத்து மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியில் இணைந்தபோது, அவரது தலைமையில் அதிக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் இருந்தனா். இதனால், கட்சியின் பெயா், கடிகாரம் சின்னத்தை தோ்தல் ஆணையம் அஜீத் பவாருக்கு ஒதுக்கியது. இதனை எதிா்த்து சரத் பவாா் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியது. வழக்கு நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிரத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறுவதால் சின்னம் தொடா்பான பிரச்னை தீவிரமடைந்தது.
இந்நிலையில், ‘கடிகாரம் சின்னம்’ நீதிமன்ற விசாரணையில் உள்ளது என நாளிதழ்களில் அஜீத் பவாா் தரப்பு அடுத்த 36 மணி நேரத்தில் விளம்பரம் செய்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்று உச்சநீதிமன்றம் அக். 6 உத்தரவிட்டது.
ஆனால், சரத் பவாரின் புகைப்படம், விடியோ மற்றும் கடிகார சின்னத்தை தொடர்ந்து தேர்தல் பிரசாரத்துக்கு அஜித் பவார் அணி பயன்படுத்தி மக்களிடையே தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துவதாக சரத் பவார் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
இந்த வழக்கை மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம், தேர்தல் களத்தில் சரத் பவாரின் பெயரை பயன்படுத்தி போட்டியிட வேண்டாம் என்று அஜித் பவார் அணிக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சரத் பவாருக்கும் உங்களுக்கும் வெவ்வேறு சித்தாந்தங்கள் இருப்பதால், நீங்கள் உங்களின் சொந்தக் காலில் நிற்க முயற்சிக்க வேண்டும் என்று அஜித் பவார் தரப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.