
டேராடூனில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரிட்ட ஒரு பயங்கர விபத்து, காவல்துறையினரை மட்டுமல்லாமல், நாட்டையே உலுக்கியிருக்கிறது.
வேகமாக இயக்கப்பட்ட ஒரு கார், 3 பெண்கள் உள்பட 6 இளைஞர்களின் உயிரைப் பறித்துச் சென்றிருக்கிறது. இந்த விபத்தில், ஒரே ஒருவர், 25 வயதாகும் சித்தேஷ் அகர்வால் மட்டும்தான் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்தான் காரை இயக்கியவர் என்று கருதப்படுகிறது.
ஏழு பேர் பயணித்த கார் விபத்தில் சிக்கியது எப்படி?
இந்த விபத்தில் பலியானவர்கள் அனைவருமே 19 வயது முதல் 24 வயதுக்கு உள்பட்டவர்கள். இப்போது சிகிச்சை பெற்று வரும் சித்தேன் தனது வீட்டில் தனது நண்பர்களுக்கு விருந்தளித்திருக்கிறார். இரவு விருந்து முடிந்து நண்பர்களுடன் சித்தேஷ் காரில் திரும்பியபோதுதான், விபத்து நேரிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணியிருக்கும்.. மிகவும் பரபரப்பாகக் காணப்படும் ஓஎன்ஜிசி சௌக் பகுதியை கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர் வேகத்தில் எம்யுவி நெருங்குகிறது.
விபத்து நடந்த இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் விபத்து பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, 100 கிலோ மீட்டரில் வந்த கார், ஒரு சொகுசுக் காரை முந்திச் செல்கிறது, அப்போது, அதே சாலையைக் கடந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் தூரம், காரின் வேகம், லாரியின் வேகம் என அனைத்தையுமே கார் ஓட்டுநர் தவறாகக் கணித்திருக்கிறார். இதனால், வேகமாக வந்த கார், அதே வேகத்தில் கண்டெய்னர் லாரி மீது மோதுகிறது. கார் கிட்டத்தட்ட கண்டெய்னர் லாரியின் கீழே அடைக்கலம் புகுகிறது. இதில், ஆறு பேர் பலியாகினர். இரண்டு பேர் தலை நசுங்கி பலியாகினர். பலியானவர்களில் 3 பேர் கல்லூரி மாணவர்கள், ஒருவர் பொறியியல் பட்டதாரி.
ஓஎன்ஜிசி சௌக்கில் இருந்த சிசிடிவி வேலை செய்யாததால், விபத்து நடந்த இடத்தின் துல்லியமான காட்சிகள் கிடைக்கவில்லை. இந்த விபத்து நடந்த இடத்தில் பல சிசிடிவி காட்சிகள் இயங்காமல் இருந்துள்ளதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
விபத்து நடந்ததுமே, டிரக் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியிருக்கிறார். ஆனால், இதில் டிரக் ஓட்டுநரின் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சிகிச்சை பெற்று வரும் சித்தேஷ் தலையில் படுகாயமடைந்து பேச முடியாத நிலையில் உள்ளார். காரின் உரிமையாளரும், விபத்து நடந்த போது காரை ஓட்டிவந்தவரும் விபத்தில் பலியாகிவிட்டார். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் யாருமே புகார் அளிக்கவில்லை. எனவே, சட்ட நடவடிக்கைகள் குறித்து நிபுணர்களிடம் காவல்துறையினர் கேட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.