தலைநகர் சண்டீகர் யாருக்கு? பஞ்சாப் - ஹரியாணா அரசுகள் மோதல்

பொது தலைநகராக உள்ள சண்டீகரில் தனியாக சட்டப் பேரவைக் கட்டடம் கட்டும் ஹரியாணா பாஜக அரசின் நடவடிக்கைக்கு ஆளும் ஆம் ஆத்மி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பஞ்சாப் - ஹரியாணா அரசுகள் மோதல்
பஞ்சாப் - ஹரியாணா அரசுகள் மோதல்
Published on
Updated on
2 min read

சண்டீகர்: பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் பொது தலைநகராக உள்ள சண்டீகரில் தனியாக சட்டப் பேரவைக் கட்டடம் கட்டும் ஹரியாணா பாஜக அரசின் நடவடிக்கைக்கு ஆளும் ஆம் ஆத்மி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

'சண்டீகர், பஞ்சாப் மாநிலத்துக்கே சொந்தம்; அங்கு ஹரியாணா சட்டப் பேரவை கட்ட ஓர் அங்குலம் நிலம் கூட ஒதுக்கக் கூடாது' என்று பஞ்சாப் மாநில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, மாநில ஆளுநரிடம் ஆம் ஆத்மி குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

அதேநேரம், 'தலைநகர் சண்டீகர், இரு மாநிலங்களுக்கும் சொந்தமான பகுதி; இந்த விஷயத்தில், ஆம் ஆத்மி மோசமான அரசியலில் ஈடுபட வேண்டாம்' என்று ஹரியாணா முதல்வர் நாயப் சிங் சைனி தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த பஞ்சாபில் இருந்து பிரிக்கப்பட்டு, கடந்த 1966-ஆம் ஆண்டில் ஹரியாணா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. தலைநகரான சண்டீகருக்கு இரு மாநிலங்களும் உரிமை கொண்டாடிய நிலையில், அப்பகுதி யூனியன் பிரதேசமாக்கப்பட்டது. இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக உள்ள சண்டீகர், தற்போது பஞ்சாப் ஆளுநரின் நிர்வாகத்தின்கீழ் உள்ளது. பொது கட்டட வளாகத்திலேயே இரு மாநில சட்டப் பேரவைகள் மற்றும் தலைமைச் செயலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

தலைநகர் பிரச்னை பல்லாண்டுகளாக நீடித்துவரும் நிலையில், சண்டீகரில் தனியாக சட்டப் பேரவை கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை ஹரியாணா பாஜக அரசு முன்னெடுத்துள்ளது. சண்டீகரில் உள்ள ஐ.டி. பார்க் சாலையில் தங்களுக்கு ஒதுக்கப்படும் 10 ஏக்கர் நிலத்துக்கு மாற்றாக, அந்த யூனியன் பிரதேச நிர்வாகத்துக்கு பஞ்ச்குலாவில் 12 ஏக்கர் நிலத்தை வழங்க ஹரியாணா அரசு முடிவு செய்தது. இந்த நிலத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய சுற்றுச்சூழல், வனங்கள், பருவநிலை மாற்ற அமைச்சகம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தலைநகர் பிரச்னை மீண்டும் தலைதூக்கியுள்ளது.

ஹரியாணாவுக்கு உரிமை கிடையாது-பஞ்சாப்: பஞ்சாப் அமைச்சர்கள் ஹர்பால் சிங் சீமா, ஹர்ஜோத் சிங் உள்ளிட்டோர் அடங்கிய ஆம் ஆத்மி குழுவினர், மாநில ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியாவை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஹர்பால் சிங் சீமா, 'சண்டீகர், பஞ்சாபுக்கு மட்டுமே சொந்தமானது. அது பஞ்சாபின் தலைநகர் மட்டுமே. அங்கு சட்டப் பேரவை கட்டும் உரிமை ஹரியாணாவுக்கு கிடையாது. சண்டீகர் மீதான உரிமைக்காக பஞ்சாப் தொடர்ந்து போராடும்.

சட்டப் பேரவை கட்டுவதற்கு ஹரியாணாவுக்கு ஓர் அங்குலம் நிலம் கூட ஒதுக்கக் கூடாது என்று ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்.ஹரியாணா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது, தனக்கென தலைநகரை அந்த மாநிலம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டது. ஆனால், 60 ஆண்டுகளாகியும் தனக்கென தலைநகரை உருவாக்குவதில் ஹரியாணா தோல்வி கண்டுவிட்டது.காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே இப்பிரச்னைக்கு தீர்வுகாணவில்லை' என்றார்.

இரு மாநிலங்களுக்கும் சொந்தம்-ஹரியாணா: இந்த விவகாரம் தொடர்பாக ஹரியாணா முதல்வர் நாயப் சிங் சைனி கூறுகையில், 'சண்டீகர், இரு மாநிலங்களுக்கும் சொந்தமான பகுதியாகும். ஹரியாணா, பஞ்சாபின் இளைய சகோதரர். எனவே, தலைநகரை முன்வைத்து, சகோதரத்துவத்தை பாழாக்க வேண்டாம் என்று பஞ்சாப் மாநில தலைவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தனது அரசியல் லாபத்துக்காக, ஆம் ஆத்மி மோசமான அரசியலில் ஈடுபட்டுள்ளது. அதேநேரம், சண்டீகர் மீது ஹரியாணாவுக்கும் உரிமை உண்டு என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

பஞ்சாபில் நிலவும் பல்வேறு பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு இந்த விவகாரத்தை எழுப்புகிறது' என்றார்.

முன்னதாக, கடந்த 2022-ஆம் ஆண்டில் சண்டீகர் நிர்வாகத்தை மாநில அரசுக்கு மாற்ற வலியுறுத்தி, பஞ்சாப் சட்டப் பேரவையில் ஆம் ஆத்மி அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

சில தினங்களுக்குப் பின், இத்தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹரியாணா பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com