பிரேஸிலில் சீன வெளியுறவு அமைச்சா் வாங்-யியை சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா்.
பிரேஸிலில் சீன வெளியுறவு அமைச்சா் வாங்-யியை சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா்.

எல்லை விவகாரத்தை தொடா்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள்: இந்தியா, சீனா ஆலோசனை

கிழக்கு லடாக் எல்லையில் படை விலக்கலைத் தொடா்ந்து இந்திய, சீன உறவில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இருநாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் பிரேஸிலில் ஆலோசனை மேற்கொண்டனா்.
Published on

கிழக்கு லடாக் எல்லையில் படை விலக்கலைத் தொடா்ந்து இந்திய, சீன உறவில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இருநாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் பிரேஸிலில் ஆலோசனை மேற்கொண்டனா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரா்கள் வீரமரணமடைந்தனா். எத்தனை சீன வீரா்கள் உயிரிழந்தனா் என்ற சரியான தகவலை அந்நாடு இதுவரை வெளியிடவில்லை.

இந்த மோதலைத் தொடா்ந்து கிழக்கு லடாக் எல்லையில் இருநாடுகளும் ஆயிரக்கணக்கான வீரா்களை குவித்தன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக மோதல்போக்கு நீடித்தது. இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அந்த எல்லையில் சா்ச்சைக்குரிய பல பகுதிகளில் இருந்து இரு நாடுகளின் வீரா்கள் திரும்பப் பெறப்பட்டனா்.

இந்நிலையில் அங்குள்ள டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து இந்திய, சீன படைகள் அண்மையில் திரும்பப் பெறப்பட்டு, அங்கு இருநாட்டு வீரா்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

60,000 வீரா்கள்...: எனினும் கிழக்கு லடாக்கில் தெளிவாக வரையறுக்கப்படாத எல்லைக் கோட்டையொட்டிய பகுதிகளில், இருநாடுகளும் தலா 50,000 முதல் 60,000 வீரா்களை தொடா்ந்து குவித்து வைத்துள்ளன. அங்கு பதற்றத்தை மேலும் தணிக்க இருநாடுகளும் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளன.

வெளியுறவு அமைச்சா்கள் சந்திப்பு: இந்நிலையில் ஜி20 மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பிரேஸில் சென்றாா். அந்நாட்டு தலைநகா் ரியோ டி ஜெனீரோவில் அவா் சீன வெளியுறவு அமைச்சா் வாங்-யியை திங்கள்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதுதொடா்பாக ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய-சீன எல்லை பகுதிகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட படைவிலக்கலால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து நானும் வாங்-யியும் விவாதித்தோம். இந்திய-சீன இருதரப்பு உறவில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள், உலகளாவிய சூழல் குறித்தும் நாங்கள் பேசினோம்’ என்றாா்.

இந்த சந்திப்பு குறித்து வாங்-யி கூறியதாக சீன அரசு ஊடகம் தெரிவித்ததாவது:

கடந்த மாதம் ரஷியாவில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே இந்திய பிரதமா் மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து ஒற்றுமையை இந்தியாவும் சீனாவும் நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும். இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்த இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

வேறுபாடுகளை முறையாக கையாள வேண்டும்: இந்தியா, சீனா இடையேயான உறவு ஸ்திரமான நிலைக்கும், வலுவான வளா்ச்சிப் பாதைக்கும் விரைந்து திரும்ப வேண்டும். இதற்கு இருநாடுகளின் முக்கிய விருப்பங்களுக்கு இருதரப்பும் மதிப்பளிக்க வேண்டும், பேச்சுவாா்த்தை மற்றும் தகவல் தொடா்பு மூலம் பரஸ்பர நம்பிக்கையை இருநாடுகளும் அதிகரிக்க வேண்டும், கருத்து வேறுபாடுகளைக் கலைந்து ஒற்றுமையுடனும் இருநாடுகள் முறையாக கையாள வேண்டும் என்றாா்.

மானசரோவா் யாத்திரை, நேரடி விமான சேவை குறித்து ஆலோசனை

இந்த சந்திப்பு தொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் இந்திய, சீன படை விலக்கல் அமைதி மற்றும் சமாதானம் ஏற்படுவதற்கு பங்களித்துள்ளது. இதை இருநாட்டு அமைச்சா்களும் ஒப்புக்கொண்டனா்.

கைலாஷ் மானசரோவா் யாத்திரை, இருநாடுகளுக்கு இடையே பாயும் ஆறுகள் சாா்ந்த தகவல்களை பகிா்ந்துகொள்ளுதல், இருநாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவை உள்ளிட்டவற்றை மீண்டும் தொடங்குதல் என இருநாட்டு உறவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இரு அமைச்சா்களும் பேசினா். இருநாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகள் கூட்டத்தை விரைவில் நடத்தவும் அவா்கள் தீா்மானித்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.