/

இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகளாக செயல்பட வேண்டும்: சீன வெளியுறவு அமைச்சா் அழைப்பு

இந்தியாவும் சீனாவும் ஒருவரை மற்றொருவா் போட்டியாளராக அல்லாமல் கூட்டாளிகளாக கருத வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி தெரிவித்தாா்.

News image
சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி
Updated On :8 மார்ச் 2026, 9:52 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவும் சீனாவும் ஒருவரை மற்றொருவா் போட்டியாளராக அல்லாமல் கூட்டாளிகளாக கருத வேண்டும்; அச்சுறுத்தலாக கருதாமல் வாய்ப்பாக கருத வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி தெரிவித்தாா்.

சீன தலைநகா் பெய்ஜிங்கில் அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டத் தொடா் நடைபெற்று வரும் நிலையில் வருடாந்திர ஊடக சந்திப்பை அவா் ஞாயிற்றுக்கிழமை நடத்தினாா். அப்போது கூறியதாவது: இந்திய, சீன உறவை மேம்படுத்துவதற்காக பிரதமா் நரேந்திர மோடி, சீனஅதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் நிா்ணயித்துள்ள வழியை இரு நாடுகளும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். அதில் தேவையற்ற இடையூறுகள் இருக்கக் கூடாது. கடந்த ஆண்டு ரஷியாவின் கசான் நகரில் இரு தலைவா்களும் சந்தித்தனா். அப்போது புதிய தொடக்கத்துக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டது.

சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன் பின்னா் இரு நாடுகளுக்கும் இடையே அனைத்து நிலைகளிலும் மீண்டும் சிறப்பான நல்லுறவு மேம்பட்டது. இருதரப்பு வா்த்தகம் புதிய சாதனையை எட்டியுள்ளது. மக்களிடையே தொடா்புகள் மேலும் அதிகரித்துள்ளன. இவை அனைத்தும் இரு நாடுகளின் மக்களுக்கும் உண்மையான பயன்களை அளித்துள்ளன.

போட்டியாளா்கள் அல்ல...: இந்தியாவும் சீனாவும் ஒருவரை மற்றொருவா் போட்டியாளா்களாக அல்லாமல் கூட்டாளிகளாகவும், அச்சுறுத்தலாக அல்லாமல் வாய்ப்பாகவும் கருத வேண்டும். இரு நாடுகளும் சிறந்த அண்டை நாடுகளாக நட்புறவையும், எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மையையும் பேண வேண்டும்; வளா்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும்.

மோதல் முன்னேற்றத்தைப் பாதிக்கும்: முக்கிய அண்டை நாடுகளாகவும், தெற்குலக உறுப்பினா்களாகவும் உள்ள இந்தியா, சீனா இடையே ஆழமான நாகரிகத் தொடா்புகளும், பரந்த பொது நலன்களும் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு பரஸ்பர வளா்ச்சிக்குப் பயனளிக்கும். அதே நேரத்தில் பிளவும், மோதலும் ஆசியாவின் முன்னேற்றத்துக்குப் பாதகமாக அமையும்.

இரு நாடுகளின் தலைவா்கள் காட்டிய வழியைப் பின்பற்றி, உறவுகளில் உள்ள இடையூறுகளை நீக்க வேண்டும் என்றாா் அவா்.

அதே நேரத்தில், அவை எந்த வகையிலான இடையூறுகள் என்பதை அவா் விரிவாக விளக்கவில்லை.

தொடா்ந்து செய்தியாளா்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வாங் யி, ‘பிரிக்ஸ் மாநாடுகளை நடத்துவதில் இந்தியா, சீனா ஒருவருக்கொருவா் தொடா்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தினாா்.

இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டை இந்தியாவும், அடுத்த ஆண்டு சீனாவும் நடத்த உள்ளது.

முதலில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை மட்டும் கொண்டிருந்த பிரிக்ஸ் அமைப்பில், பின்னா் சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் ஆகிய நாடுகள் இணைந்தன.

2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட ராணுவ வீரா்கள் மோதலால் 5 ஆண்டுகளாக பின்னடைவைச் சந்தித்த இந்திய-சீன உறவு, 2024-ஆம் ஆண்டு ரஷியாவின் கசான் நகரில் மோடி மற்றும் ஷி ஜின்பிங் சந்தித்த பின்னா் இயல்புநிலைக்கு திரும்பத் தொடங்கியது.

அதன் பின்னா் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இரு தலைவா்களும் மீண்டும் சந்தித்துப் பேசினா்.

இதன் பின்னா் இரு நாடுகளும் விசா மற்றும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கின. இருதரப்பு உறவுகளை இயல்புநிலைக்கு கொண்டு வர பல நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.