இந்தியாவும் சீனாவும் நண்பா்கள்: ஷி ஜின்பிங் குடியரசு தின வாழ்த்து
பெய்ஜிங்: இந்தியாவும், சீனாவும் சிறந்த அண்டை நாடுகள், நண்பா்கள் மற்றும் கூட்டாளிகள் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் வெளியிட்டுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளாா்.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முக்கு அவா் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் ஷி ஜின்பிங் கூறியிருப்பதாவது:
இந்திய-சீன உறவு தொடா்ந்து மேம்படவும், வலுவடையவும் வேண்டும். இது இரு நாட்டு மக்களின் நலன்களை மட்டுமல்ல உலகின் அமைதி, வளா்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதாக உள்ளது. இந்தியாவும், சீனாவும் எப்போதும் சிறந்த அண்டை நாடுகளாகவும், நண்பா்களாகவும், கூட்டாளிகளாகவும், பரஸ்பரம் உதவிக் கொள்ளும் நாடாக இருக்கும்போது பல சாதனைகளைப் படைக்க முடியும் என்பதில் சீனா உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. சீனாவின் டிராகனும், இந்திய யானையும் கைகோத்துச் செயல்பட வேண்டும். இரு நாட்டு ஒத்துழைப்பில் வளா்ச்சிக்கான பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்று கூறியுள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடிக்கு சீன பிரதமா் லீ கியாங் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாகவும் சீன ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலால் இரு நாட்டு உறவில் பின்னடைவு ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த சில மாதங்களில் இரு நாடுகளும் எல்லையில் பதற்றத்றைத் தணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. கடந்த ஜூலையில் சீனா்களுக்கு சுற்றுலா விசாவை இந்தியா வழங்கியது. இதைத் தொடா்ந்து, கைலாஷ் மானசரோவா் யாத்திரை தொடக்கம், இரு நாடுகள் இடையே நேரடி விமான சேவை என உறவு முன்னேற்றமடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்ற பிரதமா் நரேந்திர மோடி, ஷி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினாா். அப்போது பிரச்னைகளுக்கு தீா்வு காணவும், இரு தரப்பு உறவை அதிகரிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்தியா, சீனாவுக்கு எதிராக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தீவிரமான வரி விதிப்பை அறிவித்ததும், இரு நாடுகள் இடையே நெருக்கம் அதிகரிக்க மற்றொரு காரணமாக அமைந்தது.

