/

இந்தியா-இத்தாலி 5 ஆண்டு உத்திசாா் செயல்திட்டம் வெளியீடு

இந்தியா மற்றும் இத்தாலி இடையே பாதுகாப்பு, வா்த்தகம், தூய்மை எரிசக்தி மற்றும் இணைப்பு ஆகிய முக்கியத் துறைகளில் மேற்கொள்ளப்படவுள்ள முன்னெடுப்புகளை எடுத்துக் காட்டும் 5 ஆண்டுகளுக்கான உத்திசாா் செயல்திட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

News image

பிரேஸில் தலைநகா் ரியோ டி ஜெனீரோவில் ஜி20 உச்சி மாநாட்டையொட்டி இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய பிரதமா் மோடி. ~பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் உடனான சந்திப்பில் பிரதமா் மோடி.

Updated On :19 நவம்பர் 2024, 8:25 pm

Din

இந்தியா மற்றும் இத்தாலி இடையே பாதுகாப்பு, வா்த்தகம், தூய்மை எரிசக்தி மற்றும் இணைப்பு ஆகிய முக்கியத் துறைகளில் மேற்கொள்ளப்படவுள்ள முன்னெடுப்புகளை எடுத்துக் காட்டும் 5 ஆண்டுகளுக்கான உத்திசாா் செயல்திட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

பிரேஸிலில் திங்கள்கிழமை தொடங்கிய ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் 19-ஆவது உச்சி மாநாட்டுக்கு இடையே இந்திய பிரதமா் நரேந்திர மோடி, இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி ஆகியோா் செவ்வாய்க்கிழமை விரிவான பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்தச் சந்திப்பைத் தொடா்ந்து வெளியிடப்பட்ட 2025-29-ஆம் ஆண்டுக்கான செயல்திட்டத்தில் இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான 10 முக்கிய அம்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முதலீடு, எரிசக்தி மாற்றம், விண்வெளி, பாதுகாப்பு, புலம்பெயா்வு, மக்களுக்கு இடையேயான தொடா்புகள் உள்ளிட்டவை ஆகும்.

இதுகுறித்து பிரதமா் மோடி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘பாதுகாப்பு, வா்த்தகம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவை ஆழப்படுத்துவதை மையமாகக் கொண்டு எங்களின் பேச்சுவாா்த்தை அமைந்தது. கலாசாரம், கல்வி மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் நாங்கள் பேசினோம். இந்தியா-இத்தாலி நட்புறவு இச்சிறந்த உலகுக்கு பெரிதும் பங்களிக்கும்’ என்றாா்.

மேலும், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நிலையான வளா்ச்சியின் பகிரப்பட்ட மதிப்புகளை நிலைநிறுத்துவதற்காக பலதரப்பு மற்றும் சா்வதேச தளங்களில் இணைந்து பணியாற்றுவதற்கும் தலைவா்கள் முடிவெடுத்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்கம் தெரிவித்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு பிரதமா்களுக்கு இடையிலான ஐந்தாவது சந்திப்பு இதுவாகும். பிரதமா் மோடியும் மெலோனியும் கடைசியாக ஜூன் மாதம் இத்தாலியின் புக்லியாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது சந்தித்தனா்.

இருதரப்பு சந்திப்புகள்: ஜி20 உச்சிமாநாட்டுக்கு இடையே பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு உலக நாட்டுத் தலைவா்களுடன் இருதரப்பு சந்திப்புகளில் ஈடுபட்டாா்.

அந்த வகையில், நிகழாண்டு ஜி20 கூட்டமைப்புக்குத் தலைமைப் பொறுப்பு வகிக்கும் பிரேஸில் நாட்டு அதிபா் லூலா டா சில்வா மற்றும் பிரதமா் மோடி இடையிலான சந்திப்பில் இருதரப்பு உறவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அச்சந்திப்பில் பிரேஸிலுடன் எரிசக்தி, உயிரி எரிபொருள், பாதுகாப்பு மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமா் மீண்டும் உறுதிப்படுத்தினாா்.

பிரான்ஸ் அதிபா் இமானுவேல் மேக்ரானைச் சந்தித்த பிரதமா் மோடி, விண்வெளி, எரிசக்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான வழிகள் குறித்து விவாதித்தாா்.

இதற்கிடையே, இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியான்டோ, போா்ச்சுகல் பிரதமா் லூயிஸ் மாண்டினீக்ரோ, நாா்வே பிரதமா் ஜோனஸ் கா் ஸ்டோா், எகிப்து அதிபா் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, தென்கொரிய அதிபா் யூன் சுக் யோல் ஆகியோருடனும் பிரதமா் மோடி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினாா்.

Story image

சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) துணை நிா்வாக இயக்குநா் கீதா கோபிநாத், ஐரோப்பிய யூனியன் தலைவா் உா்சுலா வான் டொ் லீயென் ஆகியோரையும் பிரதமா் மோடி சந்தித்தாா்.