மகா விகாஸ் அகாதி கட்சித் தலைவர் சுப்ரியா சுலே, காங்கிரஸ் தலைவர் நானா படோல், ஐபிஎஸ் அதிகாரியுடன் உரையாடுவதாக பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஆடியோப் பதிவு போலியானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் குப்தாவுடன் இவர்கள் உரையாடும் அந்த ஆடியோவில், பணப் பரிமைற்றம், கிரிப்டோகரன்சி குறித்துப் பேசுவதாகவும், பட்டையக் கணக்காளர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியரான கௌரவ் மேஹ்தா என்பவருடன் இவர்கள் பேசுவதாகவும் அந்த ஆடியோ அமைந்திருந்தது.
மகாராஷ்டிரத்தில் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தல் முறைகேடு நடப்பதாகக் குற்றம்சாட்டி நவ. 19ஆம் தேதி பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் இந்த ஆடியோ பதிவுகளை பதிவேற்றியிருந்தது.
இது நேற்று முழுவதும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பேசுபொருளாகியிருந்தது. பாஜக தலைவர்கள் பலரும் இது குறித்து விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர்.
ஆனால், இந்த ஆடியோக்கள் போலியானவை என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை அதிகாரப்பூர்வமானவை அல்ல என்றும், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்றும் கூறப்படுவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுப்ரியா சுலே இது பற்றி கூறுகையில், இந்த ஆடியோ போலியானது என்றும் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆடியோ பதிவுகளை செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிக்கும் டூல் ஆன ட்ரூ மீடியா மூலம் ஆய்வுக்கு உள்படுத்தியதாகவும், அதில், அமிதாப் குப்தா என்பவர் பேசும்போது கௌரவ் மற்றும் லஷ்மி என்ற வார்த்தைகளை சரியாக உச்சரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இந்த ஆடியோ போலியாக உருவாக்கப்பட்டது எனவும், நூறு சதவீதம், இந்த ஆடியோ போலியாக இருக்கலாம் என்று உறுதி செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.
காங்கிரஸ் தலைவர் நானா படோல், ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் குப்தாவை, பிட்காயினை பணமாக மாற்றிக்கொடுக்குமாறு மிரட்டும் மிகச் சிறிய இரண்டாவது ஆடியோவும் போலியாக உருவாக்கப்பட்டது என்றே ட்ரூமீடியா தெரிவித்துள்ளது.
அதுபோல, பல்வேறு ஊடக நேர்காணல்களில் பதிவான படோல் குரலும், இந்த ஆடியோவில் இருக்கும் குரலும் ஒத்துப்போகவில்லை என்றும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.