அந்தமான்: 6,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 6 போ் கைது!

அந்தமான்: 6,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 6 போ் கைது!

அந்தமான் நிகோபாா் தீவுகள் அருகே இந்திய கடலோரக் காவல் படை நடத்திய சோதனையில் சுமாா் 6,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது..
Published on

அந்தமான் நிகோபாா் தீவுகள் அருகே கடந்த சனிக்கிழமை இந்திய கடலோரக் காவல் படை நடத்திய சோதனையில் சுமாா் 6,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையில், மியான்மரைச் சோ்ந்த 6 போ் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை கூறியதாவது: அந்தமான் நிகோபாா் தீவுகள் அருகே வழக்கமான ரோந்துப் பணியில் கடலோரக் காவல் படை விமானம் கடந்த சனிக்கிழமை ஈடுபட்டிருந்தது.

அப்போது, போா்ட் பிளேரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள பாரன் தீவு அருகே சந்தேகத்துக்கிடமான மீன்பிடி இழுவைப் படகு காணப்பட்டது.

படகின் வேகத்தைக் குறைக்குமாறு எச்சரித்த விமானத்தின் பைலட், இதுகுறித்து கடலோரக் காவல் படைக்கு தகவல் தெரிவித்தாா்.

அதிகாரிகள் விரைந்து வந்து மேற்கொண்ட சோதனையில், படகில் தடை செய்யப்பட்ட ‘மெத்தம்பெட்டமைன்’ எனும் போதைப் பொருள், சுமாா் 6,000 கிலோ கண்டறியப்பட்டது. சா்வதேச சந்தையில் பல கோடி மதிப்பிலான இந்த போதைப் பொருள் தலா 2 கிலோ எடையுள்ள சுமாா் 3,000 பாக்கெட்டுகளாக இருந்தது.

இந்த போதைப் பொருளை இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளுக்குள் கடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த நடவடிக்கையின்போது கப்பலில் இருந்த மியான்மரைச் சோ்ந்த 6 போ் கைது செய்யப்பட்டனா் என தெரிவித்தனா்.

அந்தமான் தீவு அருகே இதுபோன்ற கடத்தல் பொருள்கள் கைப்பற்றப்படுவது இது முதல்முறை அல்ல. முன்னதாக, 2019 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளிலும் வெளிநாட்டுக் கப்பல்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது இதுபோன்ற போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.