பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடிSANSAD

அதிகாரப் பசி கொண்டவர்கள் மக்களால் நிராகரிப்பு: மோடி

மக்களுக்காக காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பேசியதில்லை என்று மோடி விமர்சனம்.
Published on

அதிகாரப் பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.

அவர் பேசியதாவது:

“2025ஆம் ஆண்டுக்காக நாடு தயாராகும் நிலையில், 2024ஆம் ஆண்டின் கடைசிக் கூட்டம் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தொடர் பல வழிகளில் சிறப்பு வாய்ந்தது. மிக முக்கியமாக அரசியலமைப்பின் 75ஆம் ஆண்டு தொடக்கமாகும். நாளை அரசியலமைப்பு 75ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது.

மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலர், தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தை சீர்குலைக்கும் செயல்களால் சிலர் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். நாட்டு மக்கள் அவர்களின் அனைத்து செயல்களையும் கண்காணித்து நேரம் வரும்போது தண்டிக்கிறார்கள். அதிகாரப் பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளனர்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய சிந்தனைகளையும், புதிய ஆற்றலையும் கொண்டு வரவேண்டும். ஒரு கட்சியை சார்ந்தவராக இருக்கக் கூடாது.

தொடர்ச்சியாக, 80 - 90 முறை மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், நாடாளுமன்றத்தில் விவாதங்களை நடத்த அனுமதிப்பதில்லை, மக்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை. மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. அவர்களை புரிந்து கொள்ளாததன் விளைவாக, மக்களுக்கு ஆதரவாக ஒருபோதும் பேசியதில்லை. அவர்களை மக்கள் தொடர்ந்து நிராகரிக்க வேண்டும்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற இரவு பகலாக உழைக்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் நிபந்தனை.

எதிர்க்கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள். அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், மக்களால் தொடர்ந்து நிராகரிக்கபட்டவர்கள், சக உறுப்பினர்களின் வார்த்தைகளை புறக்கணித்து, அவர்களின் உணர்வுகளுக்கும் ஜனநாயகத்தின் உணர்வுக்ளுக்கும் மதிக்களிக்காமல் இருக்கின்றனர்.

உலகமே இன்று இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது, நாடாளுமன்ற நேரத்தை பயன்படுத்துவதும், அவையில் நமது நடத்தையும் உலக அரங்கில் இந்தியா பெற்றுள்ள மரியாதையை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

இந்திய வாக்காளர்கள் ஜனநாயகத்திற்காக அர்ப்பணிப்புடன் உள்ளனர். அரசியலமைப்பின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு, நாடாளுமன்ற அமைப்பு முறையின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் நாம் அனைவரும் மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப வாழ வேண்டும். இது காலத்தின் தேவை.

ஒவ்வொரு விவாதத்தின் அம்சங்களையும் ஆரோக்கியமாக அவையில் முன்னிலைப்படுத்த வேண்டும். வரவிருக்கும் தலைமுறையினர் அதிலிருந்து உத்வேகம் பெறுவார்கள். இந்த அமர்வு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன். இந்த அமர்வை ஆர்வத்துடன் முன்னெடுத்துச் செல்ல மரியாதைக்குரிய எம்.பி.க்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com