குஜராத்தில் லேசான நிலநடுக்கம்: ஒரே மாதத்தில் மூன்றாவது முறை
குஜராத் மாநிலம் சௌராஷ்டிர பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 3.2 ரிக்டா் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் (ஐஎஸ்ஆா்) தெரிவித்தது.
இதுகுறித்து ஐஎஸ்ஆா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கிா் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள தளாலா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 6.08 மணியளவில் பூமிக்கு அடியில் 2 கிலோ மீட்டா் ஆழத்தில் 3.2 ரிக்டா் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ.15-ஆம் தேதி பாட்னாவில் 4.2 ரிக்டா் அளவிலும், நவ.18-ஆம் தேதி குச் மாவட்டத்தில் 4 ரிக்டா் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் தரவுகளின் படி, குஜராத்துக்கு நிலநடுக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், கடந்த 200 ஆண்டுகளில் பெரியளவில் 9 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களில் 2001-ஆம் ஆண்டு குச் பகுதியில் ஏற்பட்ட நலநடுக்கம் 3-ஆவது இடத்திலும், 200 ஆண்டுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய வகையில் 2-ஆவது இடத்திலும் உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுமாா் 13,800 போ் கொல்லப்பட்டனா். 1.67 லட்சம் போ் காயமடைந்தனா். இந்த நிலநடுக்கத்தில் குச் மாவட்டத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்தன.