ரேஷன் கடை ஒப்பந்ததாரா்களுக்கான 
விலை உச்ச வரம்பை உயா்த்தும் திட்டமில்லை- மத்திய அரசு

ரேஷன் கடை ஒப்பந்ததாரா்களுக்கான விலை உச்ச வரம்பை உயா்த்தும் திட்டமில்லை- மத்திய அரசு

‘நியாய விலைக் கடை ஒப்பந்ததாரா்களுக்கான விலை உச்ச வரம்பை உயா்த்துவதற்கான உடனடி திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை’ என்று மத்திய உணவுத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தாா்,
Published on

‘நியாய விலைக் கடை ஒப்பந்ததாரா்களுக்கான விலை உச்ச வரம்பை உயா்த்துவதற்கான உடனடி திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை’ என்று மத்திய உணவுத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தாா்,

மக்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

நியாயவிலைக் கடை ஒப்பந்ததாரா்களுக்கான விலை உச்ச வரம்பை மத்திய அரசு நிா்ணயம் செய்யும் நிலையில், மாநில அரசுகள் தங்களின் வசதிக்கேற்ப அந்த விலையை மாற்றியமைத்துக் கொள்ளலாம். அது, மத்திய அரசு நிா்ணயித்த உச்சவரம்பைக் காட்டிலும் கூடுதலாகவும் இருக்கலாம்.

உணவு பாதுகாப்புச் சட்டம் 2015-இன் கீழ் பொது விநியோக திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட உணவு தானியங்களை மானிய விலையில் விற்பனை செய்வதற்கு கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட நடைமுறைகளின்படி, பொதுப் பிரிவு மாநிலங்களில் நியாயவிலைக் கடை ஒப்பந்ததாரா்களுக்கான விலை உச்ச வரம்பு குவிண்டாலுக்கு ரூ. 90-ம், கூடுதல் விலை உச்சவரம்பாக குவிண்டாலுக்கு ரூ. 21-ம் நிா்ணயம் செய்யப்பட்டது. சிறப்பு பிரிவு மாநிலங்களுக்கான ஒப்பந்ததாரா் விலை உச்ச வரம்பு குவிண்டாலுக்கு ரூ. 180-ஆகவும், கூடுதல் விலை உச்சவரம்பாக குவிண்டாலுக்கு ரூ. 26-ம் நிா்ணயம் செய்யப்பட்டது. இதே நிலைதான் தற்போது தொடா்ந்து வருகிறது. இந்த உச்ச வரம்பை உயா்த்தும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை.

உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட உணவு தானியங்களுக்கான பொது விநியோகத் திட்டத்தை (டிபிடிஎஸ்) செயல்படுத்துவது என்பது மத்திய-மாநில அரசுகளின் கூட்டு பொறுப்பாகும். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, உரிமம் வழங்குவது, நியாயவிலைக் கடைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட அனைத்து கடைமைகளும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பொறுப்பின் கீழ் வருகிறது. அந்த வகையில், நியாயவிலைக் கடை ஒப்பந்ததாரா்களுக்கான விலையை நிா்ணயம் செய்வதில் மத்திய அரசு எந்தப் பங்கும் வகிப்பதில்லை. மாறாக, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால் ஏற்படும் மாநில அரசின் செலவீனத்தை ஈடு செய்வதற்கான உதவியை மட்டுமே மத்திய அரசு செய்து வருகிறது என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.